Published : 21 May 2024 06:55 PM
Last Updated : 21 May 2024 06:55 PM

‘‘ஒடிசாவை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா?’’ - அமித் ஷா கேள்வி

புரி(ஒடிசா): தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குவதற்கான தேர்தல். இந்த தேர்தல் 3 கோடி லட்சாதிபதிகளை உருவாக்கும் தேர்தல். இந்தத் தேர்தல் 4 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல், ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.

நாட்டிலேயே மிகவும் வளமான மாநிலம் ஒடிசா. கனிம வளம் நிறைந்த மாநிலமாக இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால், மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.

நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். 25 ஆண்டு கால அவரது ஆட்சியில், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. நவீன் பாபுவின் அரசு போலி அரசு. மோடி, ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார். ஏழைகளின் வயிறு ஸ்டிக்கர்களால் அல்ல, அரிசியால் நிரப்பப்படுகிறது என்பதை நான் அவருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

வளமான ஒடிசா, சுயமரியாதை கொண்ட ஒடிசா, ஒடிசாவை முன்னணி மாநிலமாக்குவது ஆகிய உறுதிகளை பிரதமர் மோடி அளித்துள்ளார். எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

இந்தத் தேர்தலில் நீங்கள், பிரதமர் மோடியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேலும், ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும்" என்று அமித் ஷா பேசினார்.

தமிழகத்தைச் சேர்ந்த வி.கே பாண்டியன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அவர், முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்தவர். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரசு பதவியை ராஜினமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்துள்ளார். நவீன் பட்நாயக் அதிக இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில், வி.கே.பாண்டியன் மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றால் வி.கே. பாண்டியனை நவீன் பட்நாயக் முதல்வராக்குவார் என பரவலாகப் பேசப்படுகிறது.

மோடி பேச்சும், ஸ்டாலின் எதிர்வினையும்: முன்னதாக, ஒடிசாவின் அங்குல் நகரில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ““நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்றார் பிரதமர். தமிழகத்தின் மதுரையை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜேடி கட்சியின் முக்கியத் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில் அவரது பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மறைமுகமாக சாடினார்.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். “தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம். வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க > தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

வி.கே.பாண்டியன்

யார் இந்த வி.கே.பாண்டியன்? - வி.கே.பாண்டியன் 2000 ஆண்டு குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ் பெற்று பஞ்சாப் கேடர் அதிகாரி ஆனார். 2002-ல் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணம் முடித்ததால், அம்மாநிலப் பணிக்கு மாறினார். ஒடிசா மக்களின் அன்பை பெற்ற பாண்டியன் கடந்த 2011-ல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட உதவியாளர் ஆனார். முதல்வருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் விருப்ப ஓய்வு பெற்று, பிஜேடியில் இணைந்தார். இவரது முயற்சியால் பாஜக, பிஜேடி கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. எனினும் கூட்டணி உருவாகவில்லை. இதையடுத்து பாஜகவினர், வி.கே.பாண்டியனை விமர்சிக்கத் தொடங்கினர். இந்த வகையில், தற்போது பிரதமர் மோடியும் வி.கே.பாண்டியனை விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x