Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

பாஜகவில் இணைந்தார் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி :

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பாஜக பிரச்சார கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. அப்போது அந்தக் கட்சியின் மாநில தலைவர் திலீப் கோஷ், தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்ளிட்டோர் முன்னிலையில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (70) பாஜகவில் இணைந்தார்.

மேற்குவங்கத்தை பூர்விகமாககொண்ட மிதுன் இதுவரை 350-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'யாகாவாராயினும் நா காக்க' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 1982-ம் ஆண்டில் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்' இந்தி திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

கல்லூரி காலத்தில் இடதுசாரி இயக்கத்தில் இருந்த அவர் கடந்த 2014-16-ம் ஆண்டுகளில் திரிணமூல் காங்கிரஸின் மாநிலங் களவை எம்.பி.யாக பதவி வகித்தார். 2 ஆண்டுகளில் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

கொல்கத்தா பிரச்சார கூட்டத் தில் மிதுன் பேசியதாவது:

வடக்கு கொல்கத்தாவில் எனது பூர்வீக வீடு இருந்தது. அந்த வீட்டின் முகவரியை கண்டுபிடிப்பது தபால்காரருக்கு கூட பெரும் சிரமமாக இருக்கும். அப்போதே எனது கனவுகளை நோக்கி பயணம் செய்தேன். இன்று எனது பிரதான கனவு நனவாகி உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்கிறேன். ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அந்த கனவை நனவாக்க பாஜகவில் இணைந்துள்ளேன். நான் மேற்குவங்க மண்ணின் மைந்தன். எனது மக்களுக்காக சேவையாற்றுவேன்.

நான் விஷமில்லாத பாம்பு என்று நினைத்து ஏமாற வேண்டாம். நான் நல்ல பாம்பு. ஒருமுறை தீண்டினால் யாரும் தப்பிக்க முடியாது. யாராவது மக்களின் உரிமைகளைப் பறித்தால் அவர்களுக்கு எதிராகப் போராடுவேன். மக்களோடு இருந்து அவர்களின் நலன்களை காப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் மிதுன் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இல்லை. பிரதமர் மேடைக்கு வந்தபோது இருவரும் பரஸ்பரம் வாழ்த்துகளை தெரி வித்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x