மத்திய அரசுடன் இணக்கம் பாராட்டும் விஜய் - ‘கம்​’முன்னு இருந்து காரியம் சாதிக்க நினைக்கிறாரா?

மத்திய அரசுடன் இணக்கம் பாராட்டும் விஜய் - ‘கம்​’முன்னு இருந்து காரியம் சாதிக்க நினைக்கிறாரா?
Updated on
2 min read

டெல்​லி​யில் பிரதமர் தலை​மை​யில் நடை​பெற்ற நிதி ஆயோக் கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் எதிர்ப்​புக் காட்​டா​மல் கலந்து கொண்​டதுடன், “மத்​திய அரசுக்கு ஆக்​கபூர்​வ​மான ஒத்​துழைப்​புத் தரு​வோம்” என்று அந்​தக் கூட்​டத்​தில் பேசி இருப்​பது ஆளும் பாஜக வட்​டாரத்தை ஆனந்​தப்பட வைத்​திருக்​கிறது.

கடந்த ஆட்​சி​யில் மத்​திய பாஜக அரசுடன் நிதி சம்​பந்​தப்​பட்ட பல்​வேறு விஷ​யங்​களுக்​காக போராட்​டம் நடத்​திக் கொண்​டிருந்​தது திமுக. பாஜக அரசும், கல்விக்​கான நிதியை தராமல் நிறுத்தி வைத்​தது. பேரிடர் கால நிவாரண நிதி​யாக திமுக கேட்ட நிதியை தரமறுத்​தது. சென்னை மெட்ரோ ரயில் விரி​வாக்​கத் திட்​டத்​துக்​கான நிதியை தர யோசித்​தது. இதனால் எதற்​கெடுத்​தா​லும் மத்​திய பாஜக அரசுக்கு எதி​ராக கொடிபிடிக்க வேண்​டிய கட்​டா​யத்​துக்கு ஆளானது திமுக.

இப்​படியே மாநில அரசுக்​கும் மத்​திய அரசுக்​கும் இடை​யில் ‘நீயா நானா’ யுத்​தம் தொடர்​கதை​யாகிப் போன​தால் தொடர்ச்​சி​யாக மூன்று ஆண்​டு​கள் நிதி ஆயோக் கூட்​டங்​களில் பங்​கேற்​காமல் புறக்​கணித்​தார் அப்​போதைய முதல்​வர் ஸ்டா​லின். 2024-ம் ஆண்டு ஜூலை​யில் நடந்த நிதி ஆயோக் கூட்​டத்​தைப் புறக்​கணித்​த​போது, “மத்​திய அரசின் நிதி​நிலை அறிக்​கை​யில் தமிழ்​நாடு என்ற வார்த்​தையே இல்​லை. அந்​தளவுக்கு தமிழ்​நாட்டு மக்​கள் மீது மத்​திய அரசு ஆத்​திரத்​தில் இருக்​கிறது.

இரண்டு பேரிடர்​களை சந்​தித்​துள்ள தமிழகத்​துக்கு பேரிடர் நிவாரண நிதி​யாக 37 ஆயிரம் கோடி கேட்​டிருந்​தோம். ஆனால், வெறும் 276 கோடியை தந்​திருக்​கிறார்​கள். மத்​திய அரசின் நிதி​நிலை அறிக்​கை​யில் நீதி இல்​லாத காரணத்​தால் நிதி ஆயோக் கூட்​டத்​தில் கலந்து கொள்​ளாமல் புறக்​கணிக்க முடி​வெடுத்​திருக்​கிறோம்” என்று சொன்​னார் ஸ்டா​லின்.

அதன் பிறகும் மத்​திய அரசு தனது நிலைப்​பாட்டை மாற்​றிக் கொள்​ளாத நிலை​யிலும் 2025 மே மாதம் நடை​பெற்ற நிதி ஆயோக் கூட்​டத்​தில் ஸ்டா​லின் மறுப்​பின்றி கலந்து கொண்​டார். இதை விமர்​சித்த அப்​போதைய எதிர்க்​கட்சி தலை​வர் எடப்​பாடி பழனி​சாமி, “மூன்​றாண்​டு​களாக நிதி ஆயோக் கூட்​டங்​களைப் புறக்​கணித்த முதல்​வர் ஸ்டா​லின், பல்​வேறு துறை​கள் சார்ந்த ஊழல்​கள் குறித்து தற்​போது விசா​ரணை​கள் நடப்​ப​தாலேயே நிதி ஆயோக் கூட்​டத்​தில் கலந்து கொண்​டிருப்​ப​தாக நினைக்​கத் தோன்​றுகிறது” என்​றார்.

இந்த நிலை​யில், தங்​களின் கொள்கை எதிரி பாஜக என்று சொன்​னாலும் ஆட்​சிக்கு வந்த நாள் முதலாகவே அரசி​யலை​யும் அரசு நிர்​வாகத்​தை​யும் தனித் தனி டிராக்​கிலேயே வைத்​திருக்​கிறார் முதல்​வர் விஜய் என்​கிறார்​கள் தவெக மாநில நிர்​வாகி​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர்​கள், “பாஜக-வுடன் கொள்கை அளவி​லான கூட்​டணி எது​வும் கிடை​யாது என்​ப​தில் தெளி​வாகவே இருக்​கும் விஜய், அதற்​காக எதற்​கெடுத்​தா​லும் பாஜக அரசுடன் மோதிக்​கொண்​டிருக்க வேண்​டிய​தில்லை என நினைக்​கிறார். அதனால் அரசி​யல் கலப்​பில்​லாத ராஜாங்க அணுகு​முறை​களை மிக​வும் கவனத்​துடனேயே கையாள்​கிறார்.

முதல்​வ​ராக பொறுப்​பேற்​றதுமே தமிழகத்​தின் முக்​கிய கட்​சிகளின் தலை​வர்​களை தேடிப்​போய் சந்​தித்​தார் விஜய். அதன் பிறகு​தான் பிரதமரைச் சந்​திக்க நாள் குறித்​தார். அப்​படிச் செய்​யாமல், எடுத்​ததுமே அவர் பிரதமரைச் சந்​திக்​கப் போயிருந்​தால் அதை​யும் அரசி​ய​லாக்கி இருப்​பார்​கள்.

அதே​போல், பிரதமரைச் சந்​தித்த கையோடு ராகுல், சோனியா உள்​ளிட்ட தலை​வர்​களை​யும் சந்​தித்​திருந்​தால் அது மத்​திய அரசுக்​கும் தமிழக அரசுக்​கு​மான சுமுக உறவில் சங்​கடத்தை உண்​டாக்​கலாம் என கணித்​தவர், முதல் பயணத்​தில் காங்​கிரஸ் தலை​வர்​களை சந்​திக்​காமல் தவிர்த்​தார். விஜய்​யின் இந்த அணுகு​முறை​யானது பாஜக-வுக்​கும் பிடித்​திருந்​தது.

அடுத்​தகட்​ட​மாக, இண்​டியா கூட்​ட​ணிக் கூட்​டத்தை திமுக புறக்​கணித்​த​தால் அந்த இடத்தை நிரப்ப தவெக-வை அதில் கலந்​து​கொள்ள வைக்க காங்​கிரஸ் தரப்​பில் பெரும் முயற்சி எடுக்​கப்​பட்​டது. அதை​யும் நாசூக்​காக தவிர்த்​து​விட்​டார் விஜய். அதே​போல், தங்​களுக்​குக் கிடைத்த ராஜ்ய சபா சீட்​டை​யும் காங்​கிரஸுக்கு தந்​து​விட்​டார்.

அப்​படி​யில்​லாமல் தவெக-வே போட்​டி​யிட்​டிருந்​தால் நாடாளு​மன்​றத்​தில் பாஜக அரசுக்கு எதி​ராக காங்​கிரஸ் எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு தவெக-​வும் ஜாமீன் கையெழுத்​துப் போட​வேண்​டிய தர்​மசங்​கடம் ஏற்​பட்​டிருக்​கும். தற்​போது அதற்​கும் இடமில்​லாமல் செய்​து​விட்ட விஜய், அடுத்த நகர்​வாக நிதி ஆயோக் கூட்​டத்​தி​லும் கலந்து கொண்டு தமிழகத்​தின் தேவை​களை எடுத்​து​வைத்​து​விட்டு திரும்பி இருக்​கிறார்.

தனது இந்​தப் பயணத்​தின் போது குடியரசுத் தலை​வரை​யும் துணை குடியரசுத் தலை​வரை​யும் சந்​தித்த விஜய், ராகுல் காந்​தி, சோனியா காந்தி, டி.​ராஜா உள்​ளிட்ட கூட்​ட​ணிக் கட்சி தலை​வர்​களை​யும் சந்​தித்​துப் பேசி​விட்டு வந்​திருக்​கிறார். ஆக, எதற்​கெடுத்​தா​லும் மத்​திய அரசுக்கு எதி​ராக சங்​க​நாதம் எழுப்​பிக் கொண்​டிருக்க வேண்​டிய​தில்லை என்​ப​தில் தெளி​வாக இருக்​கும் விஜய், அவர்​களின் போக்​கிலேயே போய் தமிழகத்​துக்​குத் தேவை​யானதை கேட்​டுப் பெறு​வது என்​ப​தில் தெளி​வாக இருப்​ப​தாகவே தெரி​கிறது” என்​றனர்.

எதற்​கும் வாய் திறக்​காமல் இருக்​கிறார் என்ற விமர்​சனங்​களுக்கு மத்​தி​யில், மத்​திய அரசுடன் விஜய் நல்​லுணர்வை பேண விரும்​புவ​தாகவே தெரி​கிறது. அவரின் இந்த அணுகு​முறை​யால் தானோ என்​னவோ, பேரிடர் நிவாரண நிதி​யாக ரூ.1000 கோடியை தமிழகத்​துக்​குத் தந்​திருக்​கிறது மத்​திய அரசு. இப்​போ​திருக்​கும் சூழலில் விஜய்க்கு இத்​தகைய அணுகு​முறை அவசி​யம் தான். ஆனால்​, இதே ரூட்​டில்​ பயணித்​து தமிழகத்​தின்​ தேவை​களை மத்​தி​ய அரசிடம்​ தடை​யின்​றி பெற்று ​விடு​வா​ரா விஜய்​? பொறுத்​திருந்து ​பார்​ப்​போம்​.

மத்திய அரசுடன் இணக்கம் பாராட்டும் விஜய் - ‘கம்​’முன்னு இருந்து காரியம் சாதிக்க நினைக்கிறாரா?
திக்குமுக்காடும் திரிணமூல் காங்கிரஸ்... மம்தா திணறுவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in