Published : 18 May 2023 06:10 AM
Last Updated : 18 May 2023 06:10 AM
கோவை: பாஜக எழுந்ததே திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது' என தெரிவித்துள்ளார்.
அவருக்கு வரலாற்றின் சில பக்கங்களை நினைவூட்ட விரும்புகிறேன். 1925-ல் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தொடங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), அடுத்த 10 ஆண்டுகளிலேயே கர்நாடகம், கேரளத்தில் வலுவாக காலூன்றியது. வடமாநிலங்கள் ஆர்எஸ்எஸ்ஸை ஏற்கும் முன்பே பெங்களூரு மாநகரமும், கடலோர கர்நாடகமும் ஆர்எஸ்எஸ்ஸிற்கு பெரும் ஆதரவளித்தன.
ராமஜென்ம பூமி இயக்கம் மூலம் நாடெங்கும் இந்து எழுச்சிக்கு வித்திட்ட, ‘விஸ்வ இந்து பரிஷத்' தொடங்கப்பட்டதும் கர்நாடகத்தின் உடுப்பியில்தான். திராவிட நிலப்பரப்பில் இருந்துதான் ஆர்எஸ்எஸ் எழுந்தது. அதிலிருந்துதான் பாஜகவும் எழுந்தது.
ஆர்எஸ்எஸ், பாஜகவை நாடு முழுவதும் கொண்டு செல்ல பெரும் பங்காற்றிய பல தலைவர்கள் கர்நாடகத்தில் இருந்து உருவானவர்கள்தான். இன்றும்கூட ஆர்எஸ்எஸ்ஸின் ஷாகாக்கள் அதிகம் நடப்பது திராவிட நிலப்பரப்பான கர்நாடகம், கேரளத்தில்தான்.
இப்போதும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவராக, அமைச்சர்களாக உள்ளனர். திராவிட நிலப்பரப்பில் பாஜக நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.
நாளையும் இருக்கும். அதனை ஒரு நாளும் யாராலும் அகற்ற முடியாது என்பதைத்தான் கடந்தகால வரலாறுகள் காட்டுகின்றன. எனவே, திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றப்பட்டுவிட்டது என யாரும் அற்ப சந்தோஷம் அடைய வேண்டாம். ஏனெனில், பாஜக எழுந்ததே திராவிட நிலப்பரப்பில் இருந்துதான். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT