Published : 30 Apr 2023 10:03 AM
Last Updated : 30 Apr 2023 10:03 AM
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், டாஸ்மாக் சார்பில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், ‘‘கூடுதல் விலைக்கு மது விற்பதாக புகார்கள் வந்தன. இதைத் தடுக்க, 4 வணிக வளாக மதுக் கடைகளில் மட்டும், கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மது விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேற்பார்வையாளர், கடை பணியாளர்கள் முன்னிலையிலேயே விற்பனை நடைபெறுவதால், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட மாட்டாது. இவற்றில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது வாங்க முடியும். இதுகுறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தினமும் ஆயிரக்கணக்கானோர், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் வந்து செல்லும் மால்களில், தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை நிறுவுவது, மக்களிடம் என்ன மாதிரியான எண்ணத்தை விதைக்கும் என்ற அடிப்படை யோசனைகூட அரசுக்கு இல்லையா?
மதுபானங்களை தாராளமாகப் பயன்படுத்த, இளைஞர்களை திமுக அரசு தூண்டுகிறது. மதுவிற்பனை மூலம் அரசின் கஜானாவை நிரப்ப, மக்களைப் பாழாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும். எந்தஒரு வணிகத்திலும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் போது, அதைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ஏற்படுவது இயல்பு. தானியங்கி மது வழங்கும் இயந்திரங்களுக்கும் அது பொருந்தும். அதனால் அதிகமாக மது விற்பனையாகும்; குடிப்பழக்கமும் அதிகரிக்கும். ஒரு மாநில அரசு மதுவிற்பனையை கட்டுப்படுத்தும் செயல்களில் தான் ஈடுபட வேண்டுமே தவிர, மதுவிற்பனையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: டாஸ்மாக் கடைகளில் மதுவை நிர்ணயிக் கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பதாக வரும் புகார்களை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்பது, திமுக அரசின் முதிர்ச்சியற்ற சிந்தனையையே வெளிக்காட்டுகிறது. இளைஞர் சமுதாயத்தை போதைக் கலாச்சாரத்திலிருந்து முழுமையாக விடுவிக்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT