Last Updated : 27 Apr, 2023 02:46 PM

31  

Published : 27 Apr 2023 02:46 PM
Last Updated : 27 Apr 2023 02:46 PM

பிரதமரின் 100-வது ‘மனதின் குரல்’ நிகழ்வு: தமிழகத்தில் தொகுதிக்கு 100 இடங்களில் ஒளிபரப்ப பாஜக திட்டம்

அண்ணாமலை | கோப்புப் படம்

மதுரை: பிரதமர் மோடியின் நூறாவது மனதில் குரல் நிகழ்வை தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிக்கு நூறு இடங்கள் வீதம் ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், சமூக சேவகர்கள், விருது பெற்றவர்கள், சாதனையாளர்கள் குறித்து பிரதமர் பேசி வருகிறார். நூறாவது மனதின் குரல் நிகழ்வு இம்மாதம் 30-ல் நடைபெறுகிறது.

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்வை தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதிக்கு நூறு இடங்கள் வீதம் ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிப்பிரிவு தலைவர்களுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மனதின் குரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாயினி ஆகியோர் கணொலி வழியாக பேசினர்.

அண்ணாமலை பேசியது: "உலகில் எந்த தலைவரும் பொதுமக்களுடன் வானொலியில் அதிகம் பேசியது இல்லை. 2-ம் உலகப் போரின்போது அமெரிக்க அதிபர் 13 வாரங்கள் வானொலியில் பேசினார். 99 முறை பேசியவர் பிரதமர் மோடி மட்டுமே. இந்த 99 முறையும் தமிழ் மொழி, தமிழக சாதனையாளர்களை பிரதமர் கவுரப்படுத்தியுள்ளார். நூறாவது மனதின் குரல் நிகழ்வை தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொகுதிக்கு நூறு பூத்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இடத்திலும் நூறு பேர் பங்கேற்க வேண்டும். இதில் பங்கேற்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை கடிதம் கொடுத்து அழைத்து மனதின் குரலை பார்க்க வைக்க வேண்டும். நூறாவது மனதின் குரல் நிகழ்வை சரித்திர சாதனை நிகழ்வாக மாற்ற வேண்டும். மேலும் இதுவரை நடைபெற்ற மனதின் குரலில் பிரதமர் பாராட்டியவர்களை கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பாராட்ட வேண்டும். இந்த நிகழ்வை நமோ செயலியில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகளவில் மனதின் குரல் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். இந்த முறை அணிப் பிரிவு நிர்வாகிகளும் மனதில் குரல் நிகழ்வை ஒளிபரப்ப கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்" என அண்ணாமலை கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x