Published : 27 Apr 2023 04:36 AM
Last Updated : 27 Apr 2023 04:36 AM

முதல்வர், உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னை பிரிக்க சதி - அடுத்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் விளக்கம்

சென்னை: முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை ஒரு கும்பல் நிறைவேற்ற துடிப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 56 விநாடிகள் பேசியதாக மற்றொரு ஆடியோ வெளியானது. அதில் அவர், “இங்கு எல்லா முடிவுகளையும் எம்எல்ஏக்களும், அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர். முதல்வரின் மகனும், மருமகனும்தான் கட்சியே” என்று அவர் பேசியிருந்தார். இந்த ஆடியோ அடுத்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: உண்மை போன்று தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும். நேற்று(ஏப்.25) முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனிநபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூறுகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடைபெற்றது என்று சொல்ல யாரும் இதுவரை முன்வராதது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அவர் அரசியலின் தரம் இவ்வளவுதான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 2 ஆண்டுகளில், பல வரலாறு காணாத சாதனைகள், புதிய திட்டங்களையும், மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம். பத்தாண்டுகளில் மத்திய அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அவர்கள் எங்கள் சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கில், நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி, இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

முதல்வர் தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமின்றி நாட்டுக்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அவரைப் பற்றி நான் எப்படி தவறாக பேசுவேன். அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு சாதனை செய்யும் நிலையில் அவர்களை பற்றி தவறாக நான் ஏன் பேச வேண்டும்.

நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், துணையாகவும் இருக்கிறார் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்காத நிலையில், அவர்கள் மீது களங்கம் சுமத்த இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவர்களிடம் இருந்து என்னை பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு மிரட்டல் கும்பல். ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனியும் அவ்வாறே தொடர்வோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x