Published : 18 Apr 2023 04:00 AM
Last Updated : 18 Apr 2023 04:00 AM

வாகன நெரிசலை தவிர்க்க மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்: இன்று முதல் 2 மாதங்களுக்கு அமல்

கோவை: கோடை விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உதகை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்கும். இதையடுத்து மேட்டுப்பாளையம் நகரில் இன்று (ஏப்.18) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதி இல்லை. கோவையிலிருந்து வரும் வாகனங்கள் பாரத் பவன் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, சிவம் தியேட்டர், சக்கரவர்த்தி ஜங்ஷன் வழியாக உதகைக்கு செல்ல வேண்டும்.

நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, வேடர் காலனி, சிறுமுகை ரோடு, ஆலங்கொம்பு ஜங்ஷன், தென் திருப்பதி நால்ரோடு, அன்னூர் சாலை வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.

நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல், சந்தக்கடை, மோத்தைபாளையம், சிறுமுகை சாலை, ஆலங்கொம்பு, தென்திருப்பதி நால் ரோடு சந்திப்பு வழியாக செல்லவேண்டும். மேட்டுப்பாளையம்- சிறுமுகை இடையே ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்படும்.

சத்தியமங்கலம், பண்ணாரி, ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு, தென் திருப்பதி நால் ரோடு, அன்னூர் சாலை வழியாக செல்லவேண்டும். மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க தேவையான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x