Published : 16 Apr 2023 04:15 AM
Last Updated : 16 Apr 2023 04:15 AM
மதுரை: தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என மதுரை பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறோம். 2009-ல் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் பாஜக தனித்துப் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றது.
அதேபோல், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைக்க வேண்டும். இது தொடர்பாக கட்சியின் மாநில தலைமைக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.60 ஆயிரம், குடிநீர் இணைப்புக்கு ரூ.50 ஆயிரம், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெறப்படுகிறது.
100 வார்டுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். பாஜக நிர்வாகிகள் குமார் வினோத்குமார், ராஜ்குமார், ரவிச்சந்திர பாண்டியன், விஸ்வநாதன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT