Published : 16 Apr 2023 04:00 AM
Last Updated : 16 Apr 2023 04:00 AM
மதுரை: மதுரை அருகே பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்த 5 பெண் குழந்தைகளின் தாயின் உடலை 3 நாள் போராட்டத்துக்கு பிறகு நேற்று உறவினர்கள் பெற்று இறுதிச் சடங்கு செய்தனர்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. கணவர் வெளியூரில் வேலை பார்த்த நிலையில், குழந்தைகளை வளர்க்க நூறு நாள் வேலைக்கு நாகலட்சுமி சென்றுள்ளார். அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் நூறு நாள் வேலைத் திட்ட பணித்தள பொறுப்பாளராக நாகலட்சுமி நியமிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து பணித்தள பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டனர். அப்போது நாக லட்சுமியின் பெயர் இடம் பெறவில்லை. இதுதொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி எழுத்தர் முத்து, உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் ஆகியோருக்கும் நாகலட்சுமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீஸார், ஆட்சியர் உள்ளிட்டோரிடம் நாகலட்சுமி புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில், இது குறித்து ஆட்சியரிடம் புகார்தெரிவிக்க கடந்த ஏப்.12-ம் தேதிமதுரைக்கு அரசு பேருந்தில் 2 குழந்தைகளுடன் வந்தார். சிவரக்கோட்டை அருகே வந்தபோது நாகலட்சுமி திடீரென பேருந்திலிருந்து குதித்து தற்கொலை செய்தார்.
இதையடுத்து அரசியல் கட்சியினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2 நாட்களாக போராட்டம் நடந்தது. இதையடுத்து, நாகலட்சுமி எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில் மையிட்டான்பட்டி ஊராட்சி எழுத்தர் முத்து உள்ளிட்ட 3 பேர் மீது கள்ளிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன், கள்ளிக்குடி ஒன்றிய திமுக செயலாளர் மதன்குமார் ஆகியோர் நாகலட்சுமி குடும்பத்தினரிடம் பேச்சு நடத்தினர். குடும்பத்துக்கு உரிய உதவி செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் நாக லட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திமுக நிர்வாகிகள் கூறுகையில், திமுக சார்பில் ஓரிரு நாளில்வங்கியில் வைப்பு நிதி செலுத்தப்பட்டு, அதற்கான ஆவணங்கள் நாகலட்சுமியின் குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT