Published : 09 Apr 2023 12:40 PM
Last Updated : 09 Apr 2023 12:40 PM

போதிய விலை கிடைக்காததால் டிராக்டர் மூலம் தக்காளி பயிரை அழிக்கும் விவசாயிகள் - பல்லடம் பகுதி சோகம்

திருப்பூர்: போதிய விலை கிடைக்காததால் தங்களது வயல் அல்லது தோட்டத்தில் தக்காளி பயிரை டிராக்டர் கொண்டு அழிக்கும் பணியில் பல்லடம் சுற்றுவட்டார விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி,வெங்காயம் சாகுபடி அதிகளவில்இருந்து வருகிறது. குள்ளம்பாளையம், காம நாயக்கன்பாளையம், காட்டூர், அருள்புரம், கரைப்புதூர், காளிநாதம்பாளையம், அல்லாளபுரம், கொடுவாய் ஆகிய சுற்றுவட்டார கிராமங்களில் தக்காளிஅதிக அளவில் பயிரிடப்படுகிறது. சில நாட்களாக விவசாயிகளிடமிருந்து தக்காளியை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே வயல் மற்றும் தோட்டங்களில் பயிரிட்டுள்ள தக்காளியை பறித்து சந்தைக்கு கொண்டு சென்றால், ஒரு டிப்பருக்கு (சுமார் 14 கிலோ) ரூ.15 நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், பலர் தக்காளி பயிரை கால்நடைகளுக்கு தீவனமாக அளித்து வருகின்றனர். மேலும், சிலர் டிராக்டர் கொண்டு தக்காளியை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, 'சந்தைக்கு கொண்டு செல்லப்படும் ஒரு டிப்பர் தக்காளி ரூ 60-க்கு விற்கப்படுகிறது. பறிப்பு, சுங்கம் மற்றும் வாகனக் கூலி உள்ளிட்டவை சேர்த்து ரூ.75 வருகிறது. ரூ.15 நஷ்டத்துக்கு எந்த விவசாயியும் தக்காளியை விற்க முடியாது. ஆகவே, ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள விவசாயிகள், பறிப்பு செலவு உள்ளிட்ட பல்வேறு நஷ்டங்களை சமாளிக்க அதனை அழித்து வருகின்றனர்" என்றனர்.

குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளார். 3 ஏக்கருக்கு உழுவதற்கு ரூ.17 ஆயிரம், நாற்று ரூ.30 ஆயிரம், நடுவதற்கு ரூ.28 ஆயிரம், மருந்துமற்றும் உரத்துக்கு ரூ.60 ஆயிரம் செலவிட்டுள்ளார். தக்காளி பறிப்பு கிலோவுக்கு ரூ.5 செலவாகும். தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்கின்றனர். தற்போது விற்கும் விலை கட்டுப்படியாகாத சூழலில் தக்காளி பயிரை அவர் டிராக்டர் கொண்டு அழித்துள்ளார்.

இது தொடர்பாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஆர்.ஈஸ்வரன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் தக்காளி மற்றும் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள், உரிய விலை கிடைக்காத நிலையில் இன்றைக்கு செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

தக்காளியை மதிப்புக் கூட்டிய பொருளாக வைத்தாலும், அதனை விவசாயி எங்கு கொண்டு வைத்து பக்குவப்படுத்துவது? ஏற்கெனவே கடன் பிரச்சினையில் இருக்கும் விவசாயிகள், மேலும் சுமை ஏற்றாத வகையில் டிராக்டர் கொண்டு அழிப்பதுதான் கடனை சமாளிக்க ஒரே வழி. அதேபோல, இன்றைக்கு வெங்காய விலை ஏறிவிட்டால் எதிர்கட்சிகள் தொடங்கி அனைவரும் குரல் எழுப்புவார்கள். ஆனால், வெங்காயம் விலை வீழ்ந்தால் விவசாயியை தவிர வேறு யாரும் குரல் எழுப்ப முடியாது.

இன்றைக்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.1.50-க்கு கொள்முதல் செய்து, இங்கு 10 கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்கிறார்கள். விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். இல்லையென்றால் விவசாயத்தில் உள்ள பலரும் இதனை விட்டு வெளியேறும் சூழல்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

விவசாயிக்கு வட்டியில்லா பயிர்க்கடனை அரசு வழங்குகிறது. ஆனால், விவசாயியின் முதலுக்கு மோசம் என்ற சூழல் வரும் போது என்ன செய்வது? எனவே, சம்பந்தப்பட்ட துறை வாரியாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x