Published : 05 Apr 2023 06:20 AM
Last Updated : 05 Apr 2023 06:20 AM

காங்கிரஸாரை கண்டித்து குமரியில் நாளை உண்ணாவிரதம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

நாகர்கோவில்: பாஜக அலுவலகத்தில் காங்கிரஸார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், இதைத் தடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், பாஜக சார்பில் நாகர்கோவிலில் நாளை (6-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் நேற்று அவர் கூறியதாவது: ராகுல்காந்தியின் எம்.பி. பதவி இழப்பைக் கண்டித்து காங்கிரஸார் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி பேரணியாக சென்றபோது வழியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்துக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதைஅங்கிருந்த பாஜகவினர் தடுக்க முயன்ற போது மோதலாக மாறியுள்ளது.

நமது சொத்தை பாதுகாப்பது நமது கடமை. அதைத்தான் பாஜகவினர் செய்துள்ளனர். இதை எப்படி தவறு என்று கூற முடியும்? ஊர்வலமாக செல்பவர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கே செல்ல வேண்டியதுதானே? ஏன்பாஜக அலுவலகத்தை நோக்கிவரவேண்டும்? எனவே வன்முறையைத் தூண்டியது காங்கிரஸ் கட்சியினர்தான்.

அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டுகாவல்துறை பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம்? மேலும் மோதலில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளா? என தெரியாது. இவர்கள் வெளி இடங்களில் இருந்து வந்துள்ளனர். வாடகைக்கு இவர்களை அழைத்து வந்து திட்டமிட்டு கலவரத்தில் இறங்கியுள்ளனர்.

இதை எதிர்பார்க்கவில்லை என்று காவல்துறை கூறுகிறது. இப்படி கூறுவதற்கு எதற்கு காவல்துறை? கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை செயல் இழந்துவிட்டது. அவர்கள் தங்களது மரியாதையை இழந்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.

சட்டம் ஒழுங்கை காப்பாற்றி குமரி மாவட்ட மக்களுக்கு அமைதியான, நிம்மதியான வாழ்வை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அதனை செய்யத் தவறிய காவல்துறையினரையும், பாஜக அலுவலகம் மீதான காங்கிரஸாரின் தாக்குதலையும் கண்டித்து, நாளை (6-ம் தேதி) நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு காலை 10 மணி முதல் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x