பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் முதல் சீனா அத்துமீறல் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.4, 2023

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் முதல் சீனா அத்துமீறல் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.4, 2023
Updated on
3 min read

நிலக்கரி சுரங்க ஏலம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழகத்தின் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை நீக்கிடவும், உணவு பாதுகாப்பினை உறுதி செய்திடவேண்டிய தேவையை வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழக அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது” என்று அதில் அவர் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், இந்தப் பகுதிகள், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020-இன் தடைக்குள் அடங்கும் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்கத்தில் உள்ள மூன்று சுரங்க வட்டாரங்களான வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகியவற்றை ஏலத்தில் இருந்து விலக்கிட வேண்டும் என்றும், அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: “டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது, மாநில உரிமையை மீறிய செயல்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

“மத்திய அரசு அனுமதி கொடுக்கட்டும், நிலக்கரியை யார் எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நான் இருக்கும்வரை அது நடக்காது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான ஏலத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும், டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் இந்த சதித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கரோனா பாதித்தோரில் 91% பேருக்கு XBB வகை தொற்று: தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐ கடந்துவிட்டது. திங்கள்கிழமை மட்டும் தமிழகத்தில் 186 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இந்த வகை கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாணவிகளின் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் அடங்கிய குழு: மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து கலாஷேத்ரா அறக்கட்டளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி. ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், ஓய்வு பெற்ற டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்தமான் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிய உச்சம் தொட்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.

அருணாச்சலில் 11 இடங்களின் பெயர்களை மாற்றி சீனா அத்துமீறல்: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் என குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் ஆகிய 11 இடங்களின் பெயர்களை சீனா பெயர் மாற்றி உள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால், அந்தப் பகுதிகளின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமை சார்ந்த யதார்த்த நிலை மாறிவிடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது முதல்முறை அல்ல. இந்த முயற்சியை முழுமையாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாக; பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் இந்த நிலை மாறிவிடாது" என தெரிவித்துள்ளார்.

சீன அத்துமீறல், அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி: “அதானியின் ஷெல் நிறுவனங்களில் இருக்கும் ரூ.20 ஆயிரம் கோடி பற்றியும், இந்திய எல்லைக்குள் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்?” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

“மோடியின் வசீகரத்துக்காகவே மக்கள் வாக்களித்தனர்”: "கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி மீதான வசீகரமே பாஜகவின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததே தவிர, அவரது கல்வித் தகுதி அல்ல. இதைப் பற்றி பேசுவதைவிட வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் என நாட்டில் பல முக்கியமாக பிரச்சினைகள் உள்ளன" என்று தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடகர் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்: பிரபல நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணி பாடகருமான ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 63.

2004-ம் ஆண்டில் வெளியான ‘காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலம் தமிழ் திரையுலகில் ரமணியம்மாள் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், பொம்மை நாயகி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களையும் பாடி புகழ்பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

நேட்டோவில் இணைகிறது பின்லாந்து: நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய இருப்பதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறும்போது, “நேட்டோ அமைப்பில் 31-வது நாடாக பின்லாந்து இணைய உள்ளது. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வாரம். வரும் மாதங்களில் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றார்.

நேட்டோவுடன் உக்ரைன் இணைவதை எதிர்க்கும் வகையில்தான் உக்ரைனின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த நிலையில், அண்டை நாடுகளில் ஒன்றான பின்லாந்து இப்போது நேட்டோவில் இணைய உள்ளது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in