“பிரதமரே, ஏன் இந்த பயம்?” - சீன அத்துமீறல், அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி

“பிரதமரே, ஏன் இந்த பயம்?” - சீன அத்துமீறல், அதானி விவகாரத்தில் ராகுல் காந்தி கேள்வி
Updated on
2 min read

புதுடெல்லி: “அதானியின் ஷெல் நிறுவனங்களில் இருக்கும் ரூ.20 ஆயிரம் கோடி பற்றியும், இந்திய எல்லைக்குள் தொடர்ந்து சீனா அத்துமீறி வருவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது ஏன்?” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வினவியுள்ளார்.

அதானி விவகாரம் என்பது அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியானதிலிருந்து காங்கிரஸும், ராகுல் காந்தியும் பிரதானமாக எழுப்பிவரும் கேள்வியாக உள்ளது. அந்தக் கேள்விக்கு மீண்டும் பதில் கோரியிருக்கிறார் ராகுல் காந்தி. டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "அதானி நிறுவனத்தின் ஷெல் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20 ஆயிரம் கோடி பற்றி பிரதமர் ஏன் மவுனம் காக்கிறார். அது பினாமி பணம் என்றால், அதன் உரிமையாளர் யார்?" என்று வினவியுள்ளார்.

பின்னர் அந்தக் குட்டி வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இரண்டு கேள்விகளை இந்தியில் பதிவிட்டுள்ளார். முதல் கேள்வி, அவர் நிருபர்களிடம் கேட்ட அதே கேள்விதான். "அதானியின் ஷெல் நிறுவனங்களில் உள்ள ரூ.20 ஆயிரம் கோடி பணம் யாருடையது. பினாமி பணம் என்றால் அதன் உரிமையாளர் யார்?" இரண்டாவது கேள்வி, "சீனா இதுவரை 2000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை பறித்துள்ளது. அவ்வப்போது பெயர் மாற்றங்களும் நடக்கிறது. பிரதமர் மவுனமாக இருக்கிறார். பதிலே இல்லை!" என்பதாகும். இந்த இரண்டு ட்வீட் மற்றும் வீடியோவுக்கு ஒரு தலைப்பும் கொடுத்துள்ளார் ராகுல் காந்தி. "பிரதமரே, ஏன் இத்தனை பயம்?" என்று தலைப்பிட்டுள்ளார்.

முதன்முறை அல்ல... - ரூ.20 ஆயிரம் கோடி பற்றி ராகுல் காந்தி குரல் எழுப்புவது இது முதன்முறை அல்ல. மக்களவை எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை முதன்முறையாக சந்தித்த ராகுல் காந்தி "பிரதமர் மோடிக்கு அதானி பற்றிய எனது அடுத்த பேச்சு பற்றி பயம் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அவர் சூரத் வழக்கை சாக்கு கூறி தகுதியிழப்பு செய்துள்ளார்" என்று கூறியிருந்தார்.

இந்த 20 ஆயிரம் கோடி ரூபாய் சர்ச்சைக்கான தரவு என்னவென்று ராகுல் காந்தி வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால், அதானி நிறுவனத்தின் 5.7 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டில் பாதியளவிலான முதலீடுகள் போலி வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்யப்பட்டவையாகும். இது சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கலாம் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையிலேயே ராகுல் இந்தக் கேள்வியை எழுப்பலாம் என்று கருதப்படுகிறது.

அதேபோல், சீன ஆக்கிரமிப்பு பற்றி ராகுல் பலமுறை குரல் எழுப்பியிருக்கிறார். அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அதற்கான அறிவிப்பை சீன உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, இதுபோன்று இருமுறை பல பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றி இருக்கிறது. 2017-ல் 6 இடங்களின் பெயர்களையும், 2021-ல் 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. 2021ல் பெயர் மாற்றப்பட்டது . இந்நிலையில் தொடர் அத்துமீறல்கள் பற்றி ராகுல் காந்தி பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். | வாசிக்க > அருணாச்சலப் பிரதேச பகுதிகளின் பெயர்களை மாற்றுவதால் யதார்த்த நிலை மாறாது: சீனாவுக்கு இந்தியா பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in