கே. பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்
கே. பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் கொடுத்தது மாநில உரிமை மீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

Published on

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது, மாநில உரிமையை மீறிய செயல்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு மத்திய அரசு அதை கைவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு கனிம வளங்கள் அவசியம் தான். அதேசமயம், விவசாயத்தை அழித்து கனிம வளம் எடுப்பது உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் என்கிற காரணத்தினால் தான் தமிழ்நாடு சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகு அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

அனைத்தும் தனியார்மயம் என்கிற குறிக்கோளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக அரசாங்கம், விமான நிலையம், துறைமுகம், என்.ஐ. நிறுவனம், எல்.ஐ.சி., தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே நிலையங்கள், ரேஷன் கடைகள் என்று ஒவ்வொன்றையும் தனது கூட்டாளிகளுக்கு விற்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியே தற்போது டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது.

இது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து இம்மக்களை ஓட்டாண்டியாக்கி விடும். தமிழக அரசின் ஒப்புதலின்றி இதை செயல்படுத்துவது மாநில உரிமையை மீறிய செயலாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இதை தொடரும் பட்சத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்களும் இணைந்து இதனை முறியடிக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசு உடனடியாக டெல்டா மாவட்டங்களை சீரழிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தடுத்துநிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in