Published : 04 Apr 2023 03:45 PM
Last Updated : 04 Apr 2023 03:45 PM
புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சில பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால், அந்தப் பகுதிகளின் மீது இந்தியாவுக்கு இருக்கும் உரிமை சார்ந்த யதார்த்த நிலை மாறிவிடாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா: அருணாச்சலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனை தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஓர் அங்கம் எனக் கூறி வருகிறது. திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ஜிஜாங் எனக் குறிப்பிட்டுகிறது. இந்நிலையில், இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை சீன உள்துறை அமைச்சகம் மாற்றி உள்ளது. இதில், அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரும் அடங்கும். இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பை ஏப்ரல் 2-ஆம் தேதி சீன உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
5 மலை முகடுகள், 2 புகழ்பெற்ற பகுதிகள், 2 நிலப் பகுதிகள், 2 ஆறுகள் ஆகிய 11 இடங்களின் பெயர்களை சீனா பெயர் மாற்றி உள்ளது. இந்த 11 பகுதிகளும் நமது நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ், நமது நிர்வாகத்தின் கீழ் இருப்பவை. இருந்தும் அவற்றை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றுவதுபோல் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது. ஏற்கெனவே, இதுபோன்று இருமுறை பல பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றி இருக்கிறது. 2017-ல் 6 இடங்களின் பெயர்களையும், 2021-ல் 15 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது.
மத்திய அரசு கருத்து: இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "சீனா இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது முதல்முறை அல்ல. இந்த முயற்சியை மழுமையாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் அங்கமாக; பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் சில பெயர்களை மாற்றுவதால் அதன் இந்த நிலை மாறிவிடாது" என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது காங்கிரஸ் விமர்சனம்: சீனாவின் இந்த நடவடிக்கையை அடுத்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ''இந்திய ராணுவம் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வந்த டெப்சாங் சமவெளிப் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள தற்போது சீனா மறுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது அருணாச்சலப் பிரதேசத்தின் தற்போதைய நிலையை மாற்றத் துடிக்கிறது.
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த 2020-ல் சீனாவுக்கு பிரதமர் மோடி நற்சான்றிதழ் கொடுத்தார். அதை அடுத்தே இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன'' என அவர் தெரிவித்துள்ளார். கல்வானுக்குப் பிறகு சீனாவுக்கு பிரதமர் மோடி நற்சான்றிதழ் அளித்ததால் நாடு மிகப் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT