Published : 19 Mar 2023 04:15 AM
Last Updated : 19 Mar 2023 04:15 AM

மாவட்ட கல்வி அலுவலர் பணி தேர்வு ஏப்.20-க்கு மாற்றம்: ஆசிரியர்கள் பங்கேற்பதில் சிக்கல்

சிவகங்கை: மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி ஏப்.20-ம் தேதிக்கு மாற்றிய நிலையில், அதேநாளில் 10-ம் வகுப்புத் தேர்வும் நடைபெறுவதால், ஆசிரியர்கள் அத்தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. இப்பணிக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 15 இடங்களில் ஏப்.9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

ஆனால், தற்போது திடீரென இத்தேர்வை ஏப்.20-ம் தேதிக்கு (வியாழக்கிழமை) மாற்றி டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர் பணிகளுக்கான தேர்வை, பெரும்பாலும் ஆசிரியர்களே அதிகளவில் எழுதுகின்றனர். தற்போது, பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

ஏப்.20-ம் தேதி 10-ம் வகுப்புக்கான சமூக அறிவியல் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. மேலும், அச்சமயத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியும் தொடங்குகிறது. இதனால், மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வில் ஆசிரியர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் நடத்துவதுதான் வழக்கம். இதனால், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைப்பதிலும், தேர்வர்கள் தேர்வு எழுதுவதிலும் சிக்கல் இருக்காது. ஆனால், மாவட்டக் கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு ஏப்.20-ம் தேதி நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி திடீரென அறிவித்துள்ளது.

அதே நாளில் 10-ம் வகுப்புத் தேர்வு நடப்பதால், அத்தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வுத் தேதியை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x