

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்புகள்: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த இரு நாட்களாக உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக் கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன். அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன்.
முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது.
மூன்றாவதாக, ஒரு முக்கியமான அறிவிப்பு. உலக முதலீட்டாளர்கள் மாநாடு. நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” வரும் 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் 3,346 அறிவிப்புகளில் 2,892 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கணித்தது ரூ.39,759 கோடி... பெற்றது ரூ.18,367 கோடி: 2022-23 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் நிலை குறித்த ஆய்வறிக்கையை தமிழக நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரைவில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில், இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உட்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது.
இது 2022-2023 ஆண் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட உதவி மானியத்தில் 46.20 சதவீதமாகும். செப்டம்பர் 2022 வரை பெறப்பட்டுள்ள வருவாய் இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டு பெறப்பட்ட ரூ.17,717 கோடியைக் காட்டிலும் 3.67 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆலைகளில் பணியாற்றுபவர்களில் 80% பேர் தமிழர்கள்: சட்டப்பேரவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,"ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதிய தொழிற்சாலைகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாடு அரசு நடத்திய ஆய்வில் புதிய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் 80% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து அரசு ஆராயும்" என்றார்.
மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை: முதல்வர் ஸ்டாலின்: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவதாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, "கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றினார். அன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை. மக்கள் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டு கடந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை காக்கவும் நான் எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்று இந்த மாமன்றமும், என்னை தேர்வு செய்து அனுப்பிய மக்களும் நன்கு அறிவார்கள்.
ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவது இல்லை. தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைப்பவன் கருணாநிதியின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்ப்பித்து காட்டும் நாளாக அன்றைய தினம் அமைந்து இருந்தது தவிர, வேறு அல்ல. பேரவைக்கு வந்து உரையாற்றி ஆளுநருக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
ஆளுநர் இல்லாமல் பேரவைக் கூட்டம்: திருமாவளவன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், "ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பைக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொள்வது மட்டும் பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்தே பிரச்சினை தான். பொது நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சனாதனத்தை மட்டுமே பேசுகிறார்.
ஆளுநராக நியமிக்கப்படுவர் ஓர் அரசியல் கட்சி சார்ந்து செயல்படக் கூடாது. ஆனால், முழுமையாக அரசியல்வாதியாக செயல்படுகிறார் ஆர்.என்.ரவி. சனாதனத்தை நிலைநாட்டுவதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை. ஆளுநர் இல்லாமல் பேரவை கூட்டம் கேரளா, மேற்கு வங்காளத்தில் நடத்துகின்றனர். தமிழகத்திலும் நடத்த வேண்டும். தமிழகத்தை மத்திய பாஜக குறிவைத்து செயல்படுகிறது. தொடர்ந்து மாவட்டம் வாரியாக ஆளுநர் செயல்பாடுகளுக்கு எதிரான போராட்டம் நடக்கும்" என்று அவர் பேசினார்.
அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம் எல் ஏ.,க்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள். வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பள்ளிகளில் இனி ‘சார்’,‘மேடம்’ என அழைக்கத் தேவையில்லை: கேரளப் பள்ளிகளில் ஆசிரியர்களை சார் என்றும் ஆசிரியைகளை மேடம் என்றும் கூப்பிடும் வழக்கத்தை விடுத்து அனைவரையும் டீச்சர் என்று பாலின சார்பற்று அழைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.
இந்திய சுற்றுலாவின் புது யுகம் தொங்கியுள்ளது - பிரதமர் மோடி: உலகின் நீளமான நீர்வழித்தட பயணம் மேற்கொள்ளும் எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பலை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்துனுடன் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழித்தட திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "உலகின் நீளமான நீர்வழிப்பயணத்தை கங்கை நதியில் தொடங்கி வைப்பது மிகவும் முக்கியமான தருணமாகும். இந்தத் திட்டம் இந்திய சுற்றுலாவின் புதிய யுகத்திற்கு அடிகோலும்” என்றார்.
எம்வி கங்கா விகாஸ் சொகுசு கப்பல் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து புறப்பட்டு வங்கதேசம் வழியாக 5 மாநிலங்களைக் கடந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணம் மேற்கொண்டு அசாமில் இருக்கும் திப்ருகர் துறைமுகத்தை அடைகிறது.
இந்திய ஹாக்கி அணிக்கு ஷாருக்கான் வாழ்த்து: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான், ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியை வாழ்த்தி உள்ளார்.
உக்ரைனின் சோலிடர் பகுதியில் போர் தீவிரம்: புத்தாண்டு தொடக்கத்தை ஒட்டி ரஷ்யா - உக்ரைன் இடையே போர் சற்று தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் இரு தரப்பிலும் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனின் சோலிடர் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிதீவிரமாக போர் நடந்து வருகிறது. சோலிடர் பகுதியில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், சோலிடர் நகரை பாதுகாக்க போதிய ஆயுதங்கள் உக்ரைன் ராணுவத்திடம் இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஒருமாத போராட்டத்துக்குப் பிறகு உக்ரைனின் சோலிடர் பகுதி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.