வேங்கைவயல் விவகாரம் | அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம்

பா.ரஞ்சித் | கோப்புப் படம்.
பா.ரஞ்சித் | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம் எல் ஏ.,க்களுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொடரூம் சமூக அநீதி! புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள். வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன? புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்திருந்தது கடந்த ஆண்டு டிச. 26-ம் தேதி தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொட்டியில் மனிதக் கழிவு கலந்தது யார் என்று கண்டுபிடிப்பதற்காக திருச்சி டிஐஜி சரவண சுந்தரால் அமைக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் தலா 2 டிஎஸ்பி, ஆய்வாளர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் கண்டனம்: இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரையில் 70 நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காத அமைச்சர்களுக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in