சக் தே இந்தியா | ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு ஷாருக்கான் வாழ்த்து

ஷாருக்கான் | கோப்புப்படம்
ஷாருக்கான் | கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான், ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் இந்திய அணியை வாழ்த்தி உள்ளார். ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவரது நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. வரும் 25-ம் தேதி இந்தப் படம் திர அரங்குகளில் வெளியாகிறது. தற்போது அவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 2007-ல் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்ட ‘சக் தே இந்தியா’ படத்தில் அவர் நடித்திருந்தார். அதில் கபீர் கான் எனும் பெயரில் ஹாக்கி பயிற்சியாளராக நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருப்பார். அந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் #AskSRK என ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் நேற்று பதில் அளித்திருந்தார்.

“இந்தியாவின் ஒடிசாவில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. உங்களுக்கு ஹாக்கி பார்க்க பிடிக்குமா? உலகக் கோப்பையை நேரில் பார்க்கும் திட்டம் உள்ளதா?” என ரசிகர் ஒருவர் அதில் கேட்டிருந்தார்.

“எனக்கு போட்டியை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஆனால், இப்போது பணியில் கொஞ்சம் பிஸியாக உள்ளேன். நீங்கள் அனைவரும் அதை செய்வீர்கள் என நம்புகிறேன். இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என ஷாருக் பதில் அளித்துள்ளார்.

ஹாக்கி உலகக் கோப்பை தொடர் ஒடிசா மாநிலத்தில் இன்று தொடங்கி உள்ளது. தொடரை நடத்தும் அணி என்ற அந்தஸ்துடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளை நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

புவனேஷ்வர் மற்றும் ரூர்கேலாவில் உள்ள இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 16 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இன்று எதிர்கொள்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in