Published : 13 Jan 2023 03:32 PM
Last Updated : 13 Jan 2023 03:32 PM

மத்திய அரசின் உதவி மானியங்கள் - கணித்தது ரூ.39,759 கோடி... பெற்றது ரூ.18,367 கோடி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | கோப்புப்படம்

சென்னை: "2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உட்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது” என்று தமிழக நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் நிலை குறித்த ஆய்வறிக்கையை தமிழக நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டப்பேரைவில் வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியிட்டார். அதில், இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது:

2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசு நிதி அளிக்கும் திட்டங்கள் உட்பட, இந்திய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.39,759 கோடி என கணிக்கப்பட்டதில், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.18,367 கோடி பெறப்பட்டுள்ளது.

இது 2022-2023 ஆண் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட உதவி மானியத்தில் 46.20 சதவீதமாகும். செப்டம்பர் 2022 வரை பெறப்பட்டுள்ள வருவாய் இதே காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டு பெறப்பட்ட ரூ.17,717 கோடியைக் காட்டிலும் 3.67 சதவீதம் வளர்ச்சியைக் காட்டுகிறது.

இந்த அரசானது, 2014-2015 முதல் சில மத்திய-மாநில அரசுகள் பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான பங்களிப்பு முறையினை மாற்றியதன் விளைவாக அதிகரித்த மாநில அரசின் பங்களிப்பிற்காக, சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து அதிகமான நிதியை மாநில அரசு மாநில அரசு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பங்கு அதிகரித்ததனால் ஏற்பட்ட நிதிச்சுமையுடன், சில திட்டங்களுக்கு மாநில அரசு செலவிட்டு அத்தொகையினை ஒன்றிய அரசிடமிருந்து திரும்பபெறுவது மற்றும் நிதியை விடுவிப்பதில் ஏற்படும் கால தாமதத்தாலும் மாநில அரசு பாதிப்படைந்துள்ளது.

மேலும், அண்மையில் இந்திய அரசு நிதியளிக்கும் திட்டங்களுக்கான நிதி பரிமாற்றம் மற்றும் விடுவிக்கும் முறையில் ஏற்படுத்திய மாற்றத்தின் காரணமாக அந்நிதியினைப் பெறுவதில் காலதாமதத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் மானியத்தில் குறிப்பிடத்தக்க அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசால் விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை மற்றும் நடப்பு நிதியாண்டிற்குரிய மானியத்தினைப் பெறுவதற்கு, தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, சரக்கு மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டின் கீழ் நிலுவையில் இருந்த முந்தைய ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகை ரூ.9,602 கோடியை 2022-23-ல் இந்திய அரசு விடுவித்துள்ளது.

கடந்த 2022 நவ.25-ம் தேதி அன்று நடைபெற்ற வரவு செலவு திட்டத்திற்கு முந்தைய கூட்டத்தில் பங்கேற்று, தமிழக நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் மேற்காணும் பிரச்சினைகளுடன் மேலும் பல கோரிக்கைகளை ஒன்றிய நிதி அமைச்சரிடம் முன்வைத்திருந்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x