Published : 13 Jan 2023 02:49 PM
Last Updated : 13 Jan 2023 02:49 PM

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆகிய 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில்முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (ஜன.13) ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது வெளியிட்ட அறிவிப்புகள்: “கடந்த இரு நாட்களாக உறுப்பினர்கள் இந்த அவையில் எடுத்து வைத்திருக்கக் கூடிய கருத்துகள் தொடர்பாக நான் அமைச்சர்களோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தேன். அதனடிப்படையில் சில அறிவிப்புகளை தற்போது நான் வெளியிட விரும்புகிறேன்.

முதலாவதாக, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15-9-2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு அவர்களின் பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவதாக, ஒரு முக்கியமான அறிவிப்பு. உலக முதலீட்டாளர்கள் மாநாடு. பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், நான் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்தேன். அதனை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கினை நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் விதமாக, பல முதலீட்டாளர்கள் மாநாடுகளை துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன.

மேலும், உலகளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில் துறை அமைச்சர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு, ஜெர்மனி, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின்ஆண்டுக் கூட்டம் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நம் மாநிலத்திற்கு மேலும் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்காக, “உலக முதலீட்டாளர்கள் மாநாடு” வரும் 2024 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10, 11 ஆம் நாட்களில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பங்கேற்புடன், பெருமளவில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தப்படும் என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x