

சென்னை: ஆளுநர் உரையன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.
இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அவர் பேசுகையில்,"தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது" என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார்.
இந்நிலையில் இன்று (ஜன.13) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவதாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் பேசினார். அப்போது அவர் பேசுகையில்," சமுக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல. இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது. மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வென்றது. காலம் குறைவு ஆனால், ஆற்றியுள்ள பணிகள் அதிகம்.
கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றினார். அன்று நடந்ததை மீண்டும் பேசி அரசியல் ஆக்க விரும்பவில்லை. மக்கள் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மாண்பை காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டு கடந்த சட்டமன்றத்தின் விழுமியங்களை காக்கவும் நான் எனது சக்தியை மீறி செயல்படுவேன் என்று இந்த மாமன்றமும், என்னை தேர்வு செய்து அனுப்பிய மக்களும் நன்கு அறிவார்கள்.
ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவது இல்லை. தமிழ் காக்க, தமிழர் நலன் காக்க, தமிழ்நாட்டின் மானம் காக்க என்றும் உழைப்பவன் கருணாநிதியின் மகன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை மெய்ப்பித்து காட்டும் நாளாக அன்றைய தினம் அமைந்து இருந்தது தவிர, வேறு அல்ல. பேரவைக்கு வந்து உரையாற்றி ஆளுநருக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.