Published : 19 Dec 2016 09:21 AM
Last Updated : 19 Dec 2016 09:21 AM

அஞ்சல் துறையில் அமலாகாத மின்னணு பரிவர்த்தனை: நாடு முழுவதும் பணம் செலுத்த முடியாமல் 12 கோடி பேர் பாதிப்பு

மத்திய அரசு பரிந்துரைக்கும் மின்னணு பரிவர்த்தனை திட்டம் மத்திய அரசின் அஞ்சல் துறையிலேயே இதுவரை அமலா காததால், நாடு முழுவதும் தங்கள் அஞ்சலக கணக்குகளில் பணத்தை செலுத்த முடியாமல் 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நாட்டின் மிகப்பெரிய, பழமை யான துறையான அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்துறை வெளியிட்ட 2015-16 நிதியாண்டுக் கான ஆண்டறிக்கையில், கடந்த 2015 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 39 கோடியே 93 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அஞ்சலகத்தில் ரூ.4 லட்சத்து, 48 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளனர்.

இவர்களில் சேமிப்பு மற்றும் தொடர் வைப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருக்கும் 12 கோடி பேர், மாதந் தோறும் பணம் செலுத்தக் கூடியவர்களாக உள்ளனர்.

தமிழகத்தில் 2014-15 நிதி யாண்டில் 6 லட்சத்து 6 ஆயிரமாக இருந்த செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள், 2016 அக்டோபரில், 16 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந் துள்ளது. அதனால் தற்போதைய நிலவரப்படி வாடிக்கையாளர்கள் மேலும் அதிகரித்திருப்பர்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பொதுமக்கள் அனைவரும் வங்கி ஏடிஎம் கார்டு மூலமாகவும், பாயின்ட் ஆப் சேல் இயந்திரம் மூலமாகவும், இன்டர்நெட் பேங்கிங் மூலமாகவும், மொபைல் ஆப் மற்றும் வேலட் மூலமாகவும் ரொக்கமில்லாத மின்னணு பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அவ்வாறு மின்னணு பரிவர்த்தனையில் ஈடுபடு வோருக்கு ரூ.340 கோடியில் பரிசு திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மத்திய அரசின் அஞ்சல் துறையில் மின்னணு பரிவர்த்தனை இதுவரை அமலாக்கப்படவில்லை. அதனால் பிரதமர் கூறும் எந்த வகையிலும் அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு திட்ட கணக்குகளில் பணத்தை செலுத்த முடியாது. இதன் காரணமாக நவம்பர், டிசம்பர் மாத தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அஞ்சலக வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாவதுடன், மத்திய அரசின் மின்னணு பரிவர்த்தனையை விரும்புவோரால் கூட, அந்த முறையில் பணம் செலுத்த முடியவில்லை. மத்திய அரசு அறிவித்த பரிசு திட்டமும் இவர்களுக்கு பொருந்தாது.

இது தொடர்பாக வியாசர்பாடியைச் சேர்ந்த அரவிந்தன்- ஜோதி தம்பதி கூறும்போது, “நாங்கள் செல்வமகள் மற்றும் பொன்மகன் ஆகிய இரு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருக்கிறோம். மாதந்தோறும் தலா ரூ.1500 வீதம் ரூ.3 ஆயிரம் செலுத்துவோம். தற்போது ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவுவதால், வங்கிக் கணக்கில் பணம் இருந்தும், பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் இரு மாதங்களாக அஞ்சலக திட்டங்களில் செலுத்த முடியவில்லை. மின்னணு பரிவர்த்தனைக்கு மத்திய அரசு நிறுவனமே தயாராகாத நிலையில், எங்களைப் போன்ற தொழிலாளர்களை மின்னணு பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் நரேந்திரமோடி அழைப்பது அபத்தமாக உள்ளது” என்றனர்.

வங்கிக் கணக்கிலும் மாற்றலாம்

இது தொடர்பாக தமிழ்நாடு அஞ்சல் துறை தலைமை அலு வலக இயக்குநர் அ.சரவணனிடம் கேட்டபோது, “அஞ்சலகத்திலேயே ஒரு சேமிப்பு கணக்கைத் தொடங்கி, அதில் ஒரு தொகையை செலுத்திவிட்டு, ரொக்கமில்லா பரிவர்த்தனையாக, சேமிப்பு கணக் கிலிருந்து, செல்வமகள் போன்ற சேமிப்பு திட்ட கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அஞ்சலக கணக்குக்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் பணம் மாற்றும் வசதி பிற்காலத்தில் வர வாய்ப்புள்ளது. வங்கி காசோலைகள் மூலமாக வழங்கலாம்” என்றார்.

எளிய மக்கள் பெரும்பாலும் காசோலைகளை பயன்படுத்தாத நிலையில், தற்போது வங்கிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், வங்கிகளை நாடி, காசோலைகளை பெறுவதும் சிரமம். அவை பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகே, அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கு கால தாமதம் ஏற்படுவதுடன், சேவை கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும். இது மின்னணு பரிவர்த்தனையின் கீழும் வராது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x