Published : 05 Jan 2023 06:41 AM
Last Updated : 05 Jan 2023 06:41 AM

எழும்பூர் வணிக வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் ‘காகிதமில்லா’ மின் பிரதியாக்க ‘டிஜிட்டல்’ பிரிவு: பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்

எழும்பூர் வணிக வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் காகிதமில்லா மின் பிரதியாக்க டிஜிட்டல் பிரிவை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார். அருகில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், கிருஷ்ணன் ராமசாமி, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் உள்ளனர்.

சென்னை: சென்னை எழும்பூர் வணிக வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் மின் பிரதியாக்க டிஜிட்டல் பிரிவை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், மின் பிரதியாக்க டிஜிட்டல் குழுவின் தலைவருமான நீதிபதி எம்.சுந்தர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, செந்தில்குமார் ராமமூர்த்தி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதிஎல்.சத்தியமூர்த்தி, எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் என்.கோதண்டராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர்உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மின்மயமாக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இ-நீதிமன்றங்களின் ஒரு அங்கமாக மின்னணுநீதிமன்றங்கள் திட்டத்தின்கீழ் நீதித்துறையில் ‘காகிதமில்லா’நடைமுறையை மேற்கொள்வதற்காக வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் மின்மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு வருகின்றன.

இதுவரை உயர்நீதிமன்ற மின்பிரதியாக்க டிஜிட்டல் குழுவின் நடவடிக்கையால் சுமார் 3 லட்சம் அசல் மரபு வழக்காவணங்கள் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர் நீதிமன்றம் தற்போது 1862-ம் ஆண்டில் இருந்து நீதிப்பேராணை, குற்றவியல், நீதியியல் மற்றும் அசல் வழக்குகள் என அனைத்து வழக்கு ஆவணங்களையும் மின்பிரதியாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கணினி பிரிவால் மின்னஞ்சல் மூலமாக நிகழ்நிலை வழக்குகளில் எங்கெல்லாம் அரசாங்கம் ஒரு தரப்பாக உள்ளதோ அங்கெல்லாம் மாநில தரவு மையத்தின் மூலமாக மாநில அரசுக்கும், வருமான வரித்துறை போன்ற மத்திய அரசு தொடர்புள்ள வழக்குகளிலும் ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் ஆவணங்கள் பகிரப்பட்டு நடைமுறை சிரமங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர பிராந்திய மொழி ஆவணங்கள், வரலாற்று சிறப்பு மிக்க வழக்குகள் மற்றும் நிர்வாககோப்புகளை மின்பிரதிமயமாக்கும் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது கணினி வாயிலாக அடோப் ஸ்கிரீன் ரீடர் மூலமாக எளிதாக பாதுகாப்பு ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வசதிகளைப்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என இந்நிகழ்வில் பங்கேற்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x