Published : 05 Jan 2023 04:13 AM
Last Updated : 05 Jan 2023 04:13 AM

கடலூர் மாநகராட்சி குப்பைக் கிடங்கு வெள்ளப்பாக்கத்தில் அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு

கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் கடலூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 6 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்: கடலூர் அருகே வெள்ளப் பாக்கத்தில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 6 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு குப்பைக் கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே ஆற்று ஓரமாகவும், சாலை ஓரமாகவும் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதை தவிர்க்கும் வகையில், கடலூர் அருகே உள்ள வெள்ளப் பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறது.மாநகராட்சி தற்போது தேர்ந் தெடுத்துள்ள பகுதியைச் சுற்றிலும்வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபு ரம் கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள் இந்த குப்பைக் கிடங்கால் தங்கள் பகுதி சூழல் சீர்கேடு அடையும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அருகில் உள்ள விவசாய நிலங் களும் பாதிக்கப்படும் என்று கூறி அவ்வப்போது சிறுசிறு போராட் டங்களை நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபுரம் ஆகியகிராமங்களைச் சேர்ந்த அனைத்துகிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்குக்கு எதிராக வெள்ளப் பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை: இது குறித்து தகவல் அறிந்தகடலூர் வட்டாட்சியர் பூபாலச்சந்திரன், பண்ருட்டி டிஎஸ்பிசபியுல்லா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுபோராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

“உங்கள் அனுமதியை பெற்ற பிறகுதான் இந்தப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கப்படும். ஆகையால் போராட்டத்தை கைவிட்டு முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்” என்று கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், “வருவாய் கோட்டாட்சியர் போராட்டகளத்திற்கு வந்து, இந்தப் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால், நாங்கள் போராட்டத்தை கைவிடத் தயார்” என்று கூறி, தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு, 50-க்கும் மேற்பட்ட போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

‘கடலூர் மாநகராட்சி இப்பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இங்குள்ள அரசு விதைப் பண்ணைநிலத்தை மீண்டும் விவசாய பண்ணையாக மாற்ற வேண்டும்” என்பதே எங்களது முக்கிய கோரிக்கை என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x