Last Updated : 31 Dec, 2022 10:20 PM

 

Published : 31 Dec 2022 10:20 PM
Last Updated : 31 Dec 2022 10:20 PM

புதுச்சேரி | கால தாமதம், தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு - பாண்லே பால் விற்பனை நிறுத்தத்தால் முகவர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. பாண்லே பாலுக்கு புதுச்சேரி மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. பாண்லே முகவர்கள் மூலம் 80 சதவீத பால் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் வழக்கமாக வரும் நேரத்தை விட காலதாமதமாக பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பாண்லே முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஏஐடியூசி பாண்லே முகவர்கள் அய்யங்குட்டிபாளையம் பாண்லே தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு ஏஐடியூசி மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். பாண்லே முகவர்கள் சங்க தலைவர் கலைமாமணி, செயலாளர் முருகன், பொருளாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாநில பொருளாளர் அந்தோணி, முகவர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பொதுச்செயலாளர் சேதுசெல்வம் கூறும்போது, ‘‘புதுச்சேரிக்கு ஒரு நாளைக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் தேவை. புதுச்சேரியில் கொள்முதல் செய்யும் பால் தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பால் வாங்கப்படுகிறது. அவ்வாறு வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப்பட்ட பாலுக்கான தொகை ரூ.15 கோடி கொடுக்கப்படாமல் உள்ளது.

இதனால் அரசு கேட்கின்ற பாலை அவர்கள் கொடுப்பதில்லை. பணம் செலுத்தினால் மட்டுமே, அவர்கள் பால் ஏற்றி அனுப்புகின்ற நிலைக்கு தற்போது வந்துவிட்டது. பணம் கொடுக்க முடியாததால் கடந்த 3 மாதமாக 60 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே வாங்கப்படுகிறது. இதனால் அனைத்து முகவர்களுக்கும் பால் கிடைப்பதில் சிக்கல், வழக்கமாக வரும்நேரத்தை விட காலதாமதமாக பால் விநியோகம் செய்யப்படுவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர், விற்பனையாருக்கு இடையே பிரச்சனை வருகிறது.

140 முகவர்கள் உள்ளனர். இவர்கள் மூலமாகத்தான் 80 சதவீதம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பாண்லேவுக்கு அதிகப்படியான வருமானமும் வருகிறது. எனவே வாங்கப்படும் 60 ஆயிரம் லிட்டரை அனைத்து முகவர்களுக்கும் சராசரியாக வழங்க வேண்டும். அதேபோல் காலதாமதமின்றி குறித்த நேரத்துக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் இந்த பிரச்சனை தீர்க்காமலும், எதையும் கண்டுகொள்ளாமலும் இருக்கின்றனர்.

ஆகவே இன்று பிற்பகல் முதல் பால் விற்பனையை நிறுத்தி வைக்க முடிவு செய்து நிறுத்தியுள்ளோம். வழக்கமான நேரத்தில் காலதாமதமின்றி, ஏற்கனவே வழக்கமாக வழங்கப்படும் அளவு பால் வழங்கினால் மட்டுமே விநியோகம் செய்வோம்.’’ என்றார். இதனால் பாலண்லே பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x