Published : 31 Dec 2022 07:55 AM
Last Updated : 31 Dec 2022 07:55 AM
சென்னை: சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று வழங்க வேண்டும். இது நாளை முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
கரோனா பரவலை கருத்தில்கொண்டு, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சில வழிகாட்டுதல்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளதாவது: சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, வரும் ஜன.1-ம்தேதி (நாளை) முதல் இந்த நாடுகளில் இருந்து வருவோர் தாங்கள்பயணிப்பதற்கு 72 மணி நேரத்துக்குள்ளாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும். முறையாக தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பிக்க வேண்டும்.
சர்வதேச பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பொதுவாக, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பரிசோதனை செய்யப்படுவது இல்லை. அதேநேரம், அவர்களுக்கு அறிகுறி இருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
விமான நிலையங்களில் உடல்வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்கள். தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களது சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும். வெளிநாடுகளில் இருந்து வருவோர், வீட்டுக்கு சென்றாலும் தொடர்ந்து தங்களது உடல்நிலையை கண்காணித்து, அறிகுறி இருந்தால் 104 என்ற சுகாதாரத் துறைஎண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT