Published : 31 Dec 2022 07:45 AM
Last Updated : 31 Dec 2022 07:45 AM

மெரினா கடற்கரையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்கான மணல் சிற்பம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, கீதா ஜீவன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு அமைக்கப்பட்டிருந்த “பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழி” விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டார்.

மணல் சிற்பம் குறித்து 181 உதவி மையத்தின் நிர்வாகி கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: அவசர எண்களான 100, 108 போன்றவற்றை அனைவரும் அறிந்திருந்தாலும், 181-ஐ பற்றி பெரிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை.

எனவே பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த நவ.25 முதல் டிச.10 வரை துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதிதான் இந்த விழிப்புணர்வு மணல் சிற்பம்.

இதற்காக கடந்த 2 நாட்களாக 6 பேர் வேலை பார்த்தனர். சென்னையை சேர்ந்த மணல் சிற்பி கஜேந்திரன் என்பவர் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார். நேற்று முன்தினம் (டிச.29) காலை 11 மணிமுதல் நேற்று (டிச.30) அதிகாலை 2 மணி வரை கடற்கரையில் இதற்கான பணி நடைபெற்றது.

இந்த மணல் சிற்பம் 15 அடிஉயரமும், 20 அடி அகலமும் கொண்டது. சிற்பத்தின் சிறப்பம்சமாக வயதான பெண்மணி, கல்லூரி மாணவி போன்ற பல்வேறு வயது பெண்களின் சிற்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் அனைத்து வயது பெண்களுக்கும் இந்த உதவி மையம் உதவி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, பி.கீதா ஜீவன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி, சமூக நலத்துறை இயக்குநர் த.ரத்னா, 181 மகளிர் உதவி மையத்தின் திட்டத் தலைவர் ஷரின் பாஸ்கோ, மணல் சிற்பி கஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x