Last Updated : 31 Dec, 2022 06:18 AM

 

Published : 31 Dec 2022 06:18 AM
Last Updated : 31 Dec 2022 06:18 AM

தேனி வழியாக சபரிமலை செல்லும் வெளிமாநில பாதயாத்திரை பக்தர்கள் அதிகரிப்பு

கூடலூர்

தேனி வழியாக சபரிமலைக்கு பாதயாத்திரையாகச் செல்லும் வெளிமாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவ.17-ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. 41 நாள் வழி பாட்டுக்குப் பிறகு டிச.27-ம் தேதி நடை அடைக்கப்பட்டது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக நேற்று வழிபாடுகள் தொடங்கின.

இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தேனி வழியாக அதிக அளவில் செல்கின்றனர். இவர்களுக்காக மாவட்டத்தின் வழி நெடுகிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அன்னதானம், ஓய்வு, மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேனி விவசாய மாவட்டம் என்பதால் வழிநெடுகிலும் இத மான பருவநிலை நிலவுகிறது. இதனால் வெளிமாநில பக்தர்கள் தேனி மாவட்டத்தில் சிரமமின்றி சரணகோஷங்களுடன் கடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், 25 நாட்களாக நடந்து வந்து கொண்டிருக்கிறோம். மற்ற மாவட்டங்களை விட தேனியில் எங்களுக்கு பலரும் பல்வேறு வசதிகள் செய்து தந்து உபசரிக்கின்றனர். இதனால் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் இன்றி ஐயப்பன் நினைவிலேயே சென்று கொண்டிருக்கிறோம் என்றனர்.

கர்நாடகா மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கூறுகையில், 12-வது ஆண்டாக சபரிமலைக்கு செல்கிறேன். இதுவரை எந்த ஒரு இடையூறும் ஏற்பட்டதில்லை. பலரும் ஆர்வமுடன் எங்களுக்கு சேவை செய்கின்றனர் என்றார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கனகநந்தல் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் கூறுகையில், எனக்கு இது 18-ம் ஆண்டு பயணம். இந்த முறை சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன். எங்களது குழுவினர் சில தினங்களில் வாகனங்களில் கிளம்பி வருவர். அவர்களுடன் இணைந்து தரிசனம் செய்ய உள்ளேன் என்றார்.

பாதயாத்திரையாக மட்டுமின்றி, ஏராளமானோர் வாகனங்களிலும் தேனி வழியாக சபரிமலைக்குச் செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கம்பம் பகுதியிலிருந்து கம்பம்மெட்டு வழியே சபரிமலை செல்வதற்கு ஒருவழிப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x