Published : 30 Dec 2022 05:32 AM
Last Updated : 30 Dec 2022 05:32 AM

அமைச்சர் உதயநிதி சிறப்பாக செயல்படுவார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

திருச்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி, அவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள உதயநிதி அமைச்சரவைக்குதான் புதியவர். உங்களுக்கு பழைய முகம்தான். அவர் அமைச்சராக பொறுப்பெற்றபோது விமர்சனங்கள் வந்தன. வரத்தான் செய்யும். அப்போது, ‘என் செயல்பாட்டைப் பாருங்கள். அதன்பிறகு விமர்சனம் செய்யுங்கள்’ என்றார்.

அவர் எம்எல்ஏவாக ஆன போதும் விமர்சனங்கள் வந்தன. அதற்கெல்லாம் தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெற்றார். தன்னை நிரூபித்தும் காட்டினார்.

உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன்கள் போன்ற முக்கியமான துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழகத்தில் ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தக்கூடிய துறைகள்.

அமைச்சர் பொறுப்பில் அவர் சிறப்பாக பணியாற்றி இந்த துறைகளை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. மேம்படுத்த வேண்டும் என முதல்வராக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்.

நான் உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதல்வராக இருந்தபோது இத்துறையை சிறப்பாக வைத்திருந்தேன். தற்போது உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் வகையில், அதற்காக பாடுபட வேண்டும். அதற்குரிய நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x