Published : 30 Dec 2022 05:14 AM
Last Updated : 30 Dec 2022 05:14 AM

கிராமங்களில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்க புதிய நடைமுறைகளை வெளியிட்டது ஊரக வளர்ச்சித் துறை

சென்னை: கிராமப்புறங்களில் பாதுகாப்பற்ற வகையில் உள்ள கட்டிடங்களை இடிப்பதற்கான புதிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி கட்டிடங்கள் இதர கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தால் அவற்றை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடங்களை இடிக்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

அதன்படி, கட்டிடத்தை இடிக்கும் முன் அதற்கான உத்தரவை உரிய அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும். உரிய வழிமுறைகள் பின்பற்றி இடிக்கப்பட வேண்டும். கட்டிட இடிப்பின்போது, உரிய இடைவெளி பின்பற்றி அபாயத்தை தெரிவிக்கும் சமிக்ஞைகள் அக்கட்டிடத்தை சுற்றியும் நிறுவப்பட வேண்டும். யாரும் அப்பகுதிக்குள் வராமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட வேண்டும்.

ஆபத்து ஏற்பட்டால் பணியாட்கள் வெளியேற குறைந்தபட்சம் 2 தனித்தனி வாயில்கள் அமைக்க வேண்டும். ஒரு பழுதடைந்த சுவர்இடிக்கப்பட்டால் அருகில் உள்ளகட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனித உயிர்களுக்கு அபாயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இடிக்கப்படும் பகுதியில் சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே வருவதை தடுக்க வேண்டும். கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டிக்க மின் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கட்டிடத்தை இடிக்கும் முன் மின் இணைப்பு, கழிவுநீர், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கனமழை காலத்தில்..: கட்டிடப் பகுதியில், முதலுதவிப்பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும், தகுதியான மருத்துவர் அழைத்தால் உடனே வரும் வகையில் ஏற்பாடு செய்துவைத்திருக்க வேண்டும். மழை அல்லது கனமழை காலங்களில் இடிக்கும் பணியை மேற்கொள்ளக்கூடாது. அபாயம் ஏற்பட்டால் பணியாளர்களை எச்சரிப்பதற்கான எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

பணியாளர்களுக்கு பாதுகாப்பு தலைக்கவசம், தோல் அல்லது ரப்பர் கையுறைகள், உயரமான பகுதியில் பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பெல்ட் வழங்கப்பட வேண்டும். இடிபாடு துண்டுகள் வெளியில் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

எந்த ஒரு இடிப்பு பணி நடைபெற்றாலும், பணி முடியும் வரை அருகில் உள்ள சாலையில் செல்வோர் பாதிக்கப்படாமல் இருக்க சாலை மூடப்பட வேண்டும்.குழந்தைகள், பொதுமக்கள் அருகில் உள்ள கட்டிடங்களில் வசித்தால் அவர்களுக்கு அறிவுறுத்தி, அவர்களை வெளியேற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அனைத்து பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x