Published : 30 Dec 2022 04:23 AM
Last Updated : 30 Dec 2022 04:23 AM

சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த சேலம் பயணிக்கு கோவிட் தொற்று உறுதி

பிரதிநிதித்துவப் படம்

கோவை / சேலம்: சீனாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த சேலத்தைச் சேர்ந்த பயணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பி.எஃப்.7 வகை கரோனா பரவி வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் ரேண்டமாக தேர்ந்தெடுக்கப்படும் 2 சதவீதம் பேருக்கு தற்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் நேற்று முன்தினம் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கோவை வந்த சேலத்தைச் சேர்ந்த 37 வயது பயணிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தொற்று உறுதியானவரின் மாதிரியானது பி.எஃப்.7 வகையைச் சேர்ந்ததா என்பதைக் கண்டறிய மரபணு பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொற்று கண்டறியப்பட்ட நபர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதால், அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. இருப்பினும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

பாதிப்புக்குள்ளான நபர் வசிக்கும் வீடு சார்ந்த பகுதிகளில் கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளான நபர், அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x