Published : 29 Dec 2022 04:30 AM
Last Updated : 29 Dec 2022 04:30 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட புத்தகத் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் ஏராளமான மாணவ, மாணவியர் பங்கற்று பத்தகங்களை வாங்கிச் சென்றனர். இந்த புத்தகத் திருவிழா வரும் 4-ம் தேதி வரை நடைக்கும். மொத்தம் 50 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிந்தனையை தூண்டும் சிறப்பு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதி மன்றம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. செங்கை சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட புத்தகக் காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தொலைக்காட்சி மற்றும் செல்போனால் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் நூலகத்தில் படிக்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு காலத்தில் நூலகத்தில் இடமில்லாமல் நூலகத்துக்கு வெளியே பலர் புத்தகத்தை வைத்து வாசித்த காலம் இருந்தது. தற்போது அது போய் நூலகத்துக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. புத்தகம் வாசிக்கப்படும்போது மனஅழுத்தம் வராது, தீய பழக்கத்துக்கு செல்லாமல் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.
மேலும் நல்ல ஒழுக்கம், நல்ல நடத்தை, நல்ல சிந்தனை வளரும். மனிதனை மனிதனாக வாழ வைப்பது புத்தகமே. படிப்பும் எழுத்தும் தெரிவது கல்வி. அறிவு உலகத்தை புத்தம் வழியாகத்தான் காண முடியும். தொடர்ந்து வாசிக்கும் போது நினைவாற்றல் பெருகும் என்பதால் மாணவர்கள் புத்தக வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் தலைமை வகித்தார். எம்.பி. செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.எஸ். பாலாஜி, வரலட்சுமி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஷஜீவனா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயசாமி மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
காலை 10 மணி முதல்..: புத்தகத் திருவிழா காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடக்கிறது. இதில் 50 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலை பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. வருகிற 4-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடக்கிறது.
தினமும் சிந்தனையைத் தூண்டும் சிறப்புப் பேச்சாளர்கள் காளீஸ்வரன், ஞானசந்தபந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்த், இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேச இருக்கின்றனர். முதல் நாளான நேற்று ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் புத்தகங்களை பார்வயிட்டனர். பலர் வீட்டுக்கும் வாங்கிச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT