Published : 01 Dec 2022 07:06 AM
Last Updated : 01 Dec 2022 07:06 AM
சென்னை: எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் ரூ.3.91 கோடி செலவில் இலவச உணவுடன் கூடியமிகப் பெரிய தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனையில் இந்தியன் ஆயில் நிறுவனம் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) ரூ.25 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அவசர கால ஊர்தி மற்றும் ரூ.5 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று தொடங்கி வைத்தார்.
எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) சாந்திமலர், சென்னை ராஜீவ் காந்தி அரசுபொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநர் மீனா, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோகன், துணை பொது மேலாளர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை, தமிழகத்தில் இருக்கின்ற மகப்பேறு மருத்துவமனைகளில் பெரிய அளவிலான மருத்துவ சேவையை நூற்றாண்டுக்கும் மேலாக செய்து வருகிறது. இங்கு 1,265 படுக்கை வசதிகள் உள்ளன. 2017 முதல் 2019 வரை பிறந்த ஒரு லட்சம் குழந்தைகளில் மகப்பேறு மரணம் விகிதம் என்பது 58 ஆக இருந்தது. அது தற்போது 54 என்ற அளவில் குறைந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் என்ற வகையில் இன்றைக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மகப்பேறு மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தியது மட்டுமல்லாமல் மகப்பேறுக்காக வரும் தாய்மார்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதின் விளைவாக 43 சதவீதமாக இருந்த அறுவை சிகிச்சை பிரசவங்கள் 38 சதவீதமாக குறைந்தது.
இம்மருத்துவமனைக்கு ஏற்கெனவே கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி மூலம் கிடைத்த பங்குதொகை ரூ.1.22 கோடி வழங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் ரூ.2.44 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் குழந்தைகளை அனுமதித்துவிட்டு பெற்றோர் மரத்தடியிலும் வேறு இடங்களிலும் படுக்கை வசதிகூட இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்கள். இதைத் தவிர்க்கும் வகையில், ரூ.3.66 கோடியில் மருத்துவமனை வளாகத்தில் மிகப்பெரிய தங்கும் விடுதி கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டர் டிச.5-ம் தேதி வெளியாகவுள்ளது.
அந்த விடுதியுடன் சேர்த்து சமையல் கூடம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு சிஎஸ்ஆர் நிதியின் கீழ் இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. சமையல் கூடத்துடன் இந்த கட்டிடங்களும் அமைந்த பிறகு இங்கு தங்கும் பெற்றோர்களுக்கு இலவச உணவுடன் கூடிய தங்கும் விடுதியாக இது செயல்படும்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 4,308பணியிடங்களை மருத்துவ பணியாளர் கழகத்தின் மூலம் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 7.25 கோடி மக்கள் உள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளன. சமீபத்தில் ரூ.302 கோடி செலவில் 2,499 அதிதீவிர சிகிச்சை படுக்கைகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அம்மா உணவகம் மூடப்படாது. செயற்கை கருத்தரித்தல் மையம்சென்னை, திருச்சி, மதுரையில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT