Published : 19 Dec 2016 09:25 AM
Last Updated : 19 Dec 2016 09:25 AM

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: கருணாநிதி 2, 3 நாளில் வீடு திரும்புவார்

நாராயணசாமி, விஷால், வடிவேல் நலம் விசாரிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2 அல்லது 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் விஷால், வடிவேல் ஆகியோர் தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வீட்டிலேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டதால், கடந்த 1-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன் னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் தொண்டை, நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட கருணாநிதி மீண்டும் கடந்த 15-ம் இரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் இருக்கும் கருணாநிதியை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் சந்தித்து நலம் விசாரித்தார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கருணாநிதி உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலர் நேற்று மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடமும், டாக்டர் களிடமும் விசாரித்துச் சென்றனர். நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:

நாராயணசாமி:

கருணாநிதியின் உடல்நலம் தேறி வருவதாக கனிமொழி தெரிவித்தார். அவர் ஓய்வு எடுத்து வருகிறார். பூரண நலம் பெற்று இன்னும் 2, 3 நாட்களில் அவர் வீட்டுக்கு செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜி.கே.வாசன்:

கருணாநிதியின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்.

நடிகர் விஷால்:

கருணாநிதி குணமடைந்து இன்னும் 2, 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று சொன்னார்கள். வதந்திகளை பரப்புவது சாதாரண விஷயமாக மாறிவிட்டது. அது தடுக்கப்பட வேண்டும். வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

நடிகர் வடிவேல்:

இந்தியாவிலேயே மிகப்பெரிய தலைவர் கருணாநிதி. இவரைச் சுற்றிதான் அரசியலின் மையமே இருக்கிறது. அரசியலுக்கே இவர்தான் பெரிய முன்னோடி. இவர் இல்லாமல் அரசியல் இயங்குவது நல்லா இருக்காது. அவருக்கு வயதாகிவிட்டாலும், அவருடைய எண்ணம், சிந்தனை எந்த நேரமும் பலமாகவே இருக்கிறது. முதுமையின் காரணமாக சின்னச் சின்ன உடல் உபாதைகள் இருக்கின்றன. அவர் இன்னமும் கடின உழைப்புடன் அரசியல், இலக்கியம் என தான் சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறார். அவர் நன்றாக இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம். இன்னும் 2, 3 நாட்களில் அவர் வீட்டுக்கு வந்துவிடுவார். நாங்கள் அவரை அருகில் சென்று பார்க்கவில்லை. அவரது குடும்பத்தினர் மற்றும் டாக்டர்களை சந்தித்தோம். அவர் நல்லா இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x