Published : 17 Sep 2022 07:34 AM
Last Updated : 17 Sep 2022 07:34 AM
சென்னை: பதஞ்சலி குழுமம் 2027-ம்ஆண்டுக்குள் 5 முக்கிய இலக்குகளை எட்ட திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பதஞ்சலி குழுமத்துக்கு எதிராகவும், அதன் நிறுவனர்களில் ஒருவரான சுவாமி ராம்தேவ் குறித்தும் பல்வேறு அவதூறு செய்திகள், தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு இந்தகுழுமம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இக்குழுமம் 2027-ம்ஆண்டுக்குள் (அடுத்த 5 ஆண்டுகளில்) 5 முக்கிய இலக்குகளை எட்ட திட்டமிட்டுள்ளது.
பதஞ்சலி குழுமத்தில் பதஞ்சலி ஆயுர்வேதம், பதஞ்சலி ஃபுட்ஸ், பதஞ்சலி வெல்னெஸ், பதஞ்சலி மெடிசின், பதஞ்சலி லைஃப்ஸ்டைல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் ஏற்கெனவே பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. மற்ற 4 நிறுவனங்கள் சார்பிலும் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டி, ரூ.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை பெறத்திட்டமிடப்பட்டுள்ளது. 2047-ம்ஆண்டு சுதந்திர தின நூற்றாண்டு விழாவின்போது பதஞ்சலியின் பங்களிப்பைப் பொன் எழுத்துகளில் பதிவு செய்யத் தீர்மானித்துள்ளோம். சுதேசி தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை தன்னிறைவுஅடையச் செய்யும் செயல்களிலும் பதஞ்சலி ஈடுபட்டுள்ளது.
மெக்காலே அறிமுகப்படுத்திய மேற்கத்தியக் கல்வி அடிமைத்தனத்தில் இருந்தும், வெளிநாட்டு மருந்து முறைகளில் இருந்தும் நாட்டை விடுவிக்க பதஞ்சலி பெரும் பங்கு வகிக்கிறது. பதஞ்சலி வெல்னெஸ் யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான ஒருங்கிணைந்த மருத்துவ முறை மூலம் நோய்களில் இருந்து நிரந்தர நிவாரணம் அளிக்கிறது.
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கத்துடன் பிரதமர் மோடி ரூ.11,044 கோடி மானியத்துடன் தேசிய உணவு எண்ணெய்கள் உற்பத்தி - பனை எண்ணெய் திட்டத்தை அறிவித்தார். இதன்படி 11 மாநிலங்களில் 55 மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் நிலத்தில் எண்ணெய் பனை மரங்கள் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எண்ணெய் பனை மரங்களால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு வருவாய் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஆண்டு வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு எண்ணெய் உற்பத்தியில் நாடுதன்னிறைவை எட்டுவது மட்டுமின்றி, இறக்குமதி மூலம் நம்நாடு ஆண்டுதோறும் இழக்கும் ரூ.3 லட்சம் கோடி அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.
தற்போது பதஞ்சலி குழுமத்தின் விற்றுமுதல் ரூ.40,000 கோடி.இதை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியாகஉயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேகமாக விற்பனையாகும் நுகர்பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக மாறி இந்தியாவை உலகப் பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் எங்கள் நிறுவனம் பெரும் பங்கு வகிக்கும். பதஞ்சலி ஃபுட்ஸ்நிறுவனம் வட்டி, வரிகள், தேய்மானம் ஆகியவற்றுக்கு முந்தைய வருவாயாக ரூ.5 ஆயிரம் கோடி ஈட்டத் திட்டமிட்டுள்ளோம்.
இயற்கை மருந்துப் பொருட்கள் விற்பனைக்காக தேசிய அளவில் புதிய உள்நாட்டு மற்றும் சரியான மல்டி லெவல் மார்க்கெட்டிங் முறையில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம் சாதாரண மக்களும் நலமாக,வளமாக வாழ முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT