Published : 17 Sep 2022 06:10 AM
Last Updated : 17 Sep 2022 06:10 AM
புதுச்சேரி: பள்ளியில் சேர்க்கை இல்லாத தால் வீண் ஊதியம் பெறுவதுடன், மாணவர்களை போராடத் தூண்டிய ஆசிரியர்கள் மீது புதுச்சேரி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்உரிமை கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவை குருசுகுப்பத்தில் உள்ள என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர் நேற்று முன்தினம் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
என்.கே.சி. மேல்நிலைப் பள்ளியில் 11,12-ம் வகுப்புகளில் மொத்தம் 115 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளில் மாணவர்கள் சேராததால் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவ்வகுப்புகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அவ்வகுப்புகளுக்கு ஒரு தலைமை ஆசிரியர், இரு உடற்கல்வி ஆசிரியர்கள், ஒரு ஓவிய ஆசிரியர், ஒரு நூலகர் இன்னமும் பணியில் உள்ளனர்.
11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் 18 ஆசிரியர்கள் உள்ளனர். போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் வேலையே செய்யாமல் ஆசிரியர்கள் வீண் ஊதியம் பெறுகின்றனர்.
இதற்கிடையே சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பழைய சட்டக் கல்லுாரி கட்டிடத்தில் இயங்கி வந்தது. இப்பள்ளிக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்குப் பயிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களைக் குருசுக்குப்பம் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து கல்வித்துறை இயக்குநர் உத்தர விட்டுள்ளார்.
எவ்வித எழுத்து பூர்வமான உத்தரவு இல்லாமல் என்.கே.சி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை வெவ்வேறு பள்ளிகளுக்குத் தற்காலிகமாக வாய்மொழி உத்தரவு மூலம் கல்வித்துறை இணை இயக்குநர் இடமாற்றம் செய்துள்ளார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆசிரியர்கள் சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் இடமாற்றம்தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பொய்யாகக் கூறி மாணவர்களைப் போராடத் தூண்டி விட்டுள்ளனர்.
என்.கே.சி. மேல்நிலைப் பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர்ஆயிரம் மாணவர்கள் பயின்றுள்ளனர். அதற்கான உள்கட்டமைப்பு வசதி அப்பள்ளியில் உள்ளது. சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற500 மாணவிகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் உள்கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது.
கல்வித்துறை இணை இயக்குநர் சட்டப்படி செய்யாமல் வாய்மொழி உத்தரவு மூலம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலக் காரணமாகும். பொய்யான தகவல்களைக் கூறி மாணவர்களைப் போராட தூண்டிய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான விசாரணை உட்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையேல், அனைத்துக் கட்சிகள், சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி புதுச்சேரி கல்வித்துறைக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT