Published : 17 Sep 2022 06:25 AM
Last Updated : 17 Sep 2022 06:25 AM

ராமசாமி படையாட்சியாரின் 105-வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் மரியாதை

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாட்சியார் 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும்அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியார் 105-வதுபிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், சமூகநீதி களத்தில் வன்னியர் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட ஐயா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக, நாடு விடுதலை அடைந்தகாலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் மக்கள் கட்சியின்நிறுவனர் ராமசாமி படையாட்சியாரின் 105-வது பிறந்தநாளில் அவரது சிறப்புகளை போற்றுவோம். வணங்குவோம்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில், தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலைக்கு மரியாதை

சென்னை கிண்டி ஹால்டா சந்திப்பில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள படத்துக்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர்மு.மகேஷ்குமார், ஏஎம்வி பிரபாகரராஜா எம்எல்ஏ, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ராமசாமி படையாட்சியாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அமைப்புச் செயலாளர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா மற்றும் நிர்வாகிகள் கிண்டி ஹால்டா சந்திப்பில் படையாட்சியாரின் சிலை, படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அமமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

விடுதலைப் போராட்ட வீரராக நாட்டின் விடுதலைக்கும், பின்னாளில் அமைச்சராக மாநிலத்தின் வளர்ச்சிக்கும், பாடுபட்ட ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x