Published : 20 Jul 2022 07:40 AM
Last Updated : 20 Jul 2022 07:40 AM
சென்னை: கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்தனர்.
அத்துடன், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதுடன், கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் நியமித்தனர்.
இதையடுத்து அன்றே அதிமுகவின் கணக்குகள் உள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அக்கடிதத்தில், “ஜூலை 11-ம்தேதி சட்ட விரோதமாக பொதுக்குழுநடத்தப்பட்டு, அதில் திண்டுக்கல் சீனிவாசனை அதிமுக பொருளாளராக நியமித்துள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் நான்தான் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களிலும், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் அடிப்படையிலும் உள்ளேன். எனவே, திண்டுக்கல் சீனிவாசன் அல்லது வேறு யாரையும் கட்சியின் கணக்குகளை இயக்க அனுமதிக்க வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்துள்ளது குறித்த தகவலை கடிதம் மூலம் வங்கிக்கு தெரியப்படுத்தினார். இந்நிலையில், அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு வங்கி அனுமதித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, “இடைக்கால பொதுச்செயலாளர் தரப்பில் நியமனக் கடிதத்துடன், அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டதால், அதை ஏற்று வங்கி அனுமதித்துள்ளது” என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT