Published : 12 May 2016 12:09 PM
Last Updated : 12 May 2016 12:09 PM

வாக்களிப்பதில் சிரமமா?

வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கும் நேரத்தில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் பற்றி வாக்காளர்கள் பலர் தங்கள் அனுபவங்களை ‘தி இந்து’ நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர். அவற்றில் சில பிரச்சினைகள் பற்றி தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை பெற்றுள்ளோம். பிரச்சினைகளும் அதற்கான விளக்கங்களும் வருமாறு:

எஸ்.காந்தி - மதுரை மேற்கு

இதுவரை எங்களுக்கு பூத் சிலிப் வந்து சேரவில்லை?

பூத் சிலிப் விநியோகம் 11-ம் தேதி மாலையுடன் முடிந்துவிட்டது. கடந்தமுறை போல வாக்குச்சாவடிக்கு வெளியில் பூத் சிலிப் வழங்கப்பட மாட்டாது. எனவே, தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து வரிசை எண் விவரங்களை அறிந்துகொண்டு, அடையாள அட்டை உள்ளிட்ட வேறு ஆவணங்களைக் கொண்டு ஓட்டு போடலாம்.

ஏ.தனபாலு - திருவேற்காடு (மதுரவாயல்)

76 வயதான எனக்கு முன்னுரிமை தந்து காக்க வைக்காமல் உடனடியாக வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வாக்குச்சாவடியில் ஆண்கள், பெண்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு தனி வரிசை உள்ளது. எனவே, மற்ற வரிசையில் நிற்க வேண்டாம். விரைவாக சென்று வாக்களிக்கலாம்.

பி.நாகராஜன் - அனகாபுத்தூர் (பல்லாவரம்)

எனக்கு தேர்தல்துறையில் இருந்து வாக்காளர் அடையாள அட்டை அனுப்பியுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, வாக்குப்பதிவு மையத்தை அணுகுமாறு கூறினார். தற்போது எனக்கு பூத் சிலிப்பும் வரவில்லை. நான் எப்படி வாக்களிப்பது?

பூத் சிலிப் வழங்கும் பணி முடிந்துவிட்டது. எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்துகொண்டு, ஏற்கெனவே இருந்த முகவரியில் கிடைத்த வாக்காளர் அட்டை அல்லது வேறு ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்.

என்.ராமகிருஷ்ணன் - மதுரை (மத்தி)

வாக்குச்சாவடிகளில் பலர் வரிசையில் காத்திருக்கும்போது, அப்பகுதிகளில் இருந்து வரும் பிரபலங்கள் வரிசையில் நிற்காமல், அப்படியே வாக்களிக்க உள்ளே செல்கின்றனர். காவலர்களும் கண்டுகொள்வதில்லை.

இந்தத் தேர்தலில் நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என யாராக இருந்தாலும் வரிசையில் நின்றுதான் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்.செல்வக்கனி - கும்மிடிப்பூண்டி

வெயில் காலமாக இருப்பதால் வாக்காளர்களுக்காக நிழற்குடை, சாமியானா பந்தல் அமைக்க வேண்டும். தடுப்புக் கட்டைகள் கட்டி வரிசையாக செல்ல வைக்க வேண்டும். ஆண், பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும்.

ஆண்கள், பெண்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடிகளும் அமைக்கப் படுகின்றன. வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் போடப் படுகிறது. வாக்காளர்களுக்கு குடிநீர், உப்பு - சர்க்கரை கரைசல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இதுதவிர, வாக்குச்சாவடி மையங்களில் இருக்கை, மின்விசிறி வசதியுடன் கூடுதல் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுபவபூர்வமான உங்கள் சிரமங்களை பதிவு செய்ய...

044-42890011 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாக தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில் உங்கள் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறுமுனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதலின்படி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

இந்த தடவை சிக்கலின்றி செலுத்துவோம் நம் வாக்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x