Published : 11 Jun 2022 06:10 AM
Last Updated : 11 Jun 2022 06:10 AM
வேலூர்: தலைக்கவசம் வழக்குகளுக்காக அரசியல்வாதிகள் சொல்வதை காவல் துறையினர் கேட்க வேண்டாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் அதிகளவில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்கான ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமையவுள்ளது. இந்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை வேலூர் போக்குவரத்து காவல் துறையினர் தற்காலிக கட்டுப்பாட்டு அறையாக பயன்படுத்தவுள்ளனர். வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இதுவரை 500 கேமராக்கள், காவல் துறை மற்றும் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 470 கேமராக்கள் பொருத்தியுள்ளனர். இதில், வேலூர் மாநகரில் உள்ள சுமார் 320 கேமராக்களை கண்காணிக்கும் வசதி தற்போது மாநகராட்சி கட்டுப் பாட்டு அறையில் உள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை போக்குவரத்து காவல் பிரிவு வசம் வரும்போது, நகரில் உள்ள 80-க்கும் மேற்பட்ட சிக்னல்களை போக்குவரத்து காவலர்கள் நேரடியாக கண்காணிக்க முடியும். வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள இந்த காவல் துறை தற்காலிக கட்டுப்பாட்டு அறையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தலைக்கவசம் அணிய சொல்வது நம் நன்மைக்கு என்று தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பது காவல் துறைதான்.
தேவலோகத்தில் கூட யாராவது தவறு செய்தால் நரகத்தில்போடுவதற்கு ஆள் வைத்திருக்கிறார்கள். அதுபோல, காவல் துறை இல்லாத இடம் கிடையாது. நமக்காக இருக்கும் தூதுவர்கள் காவலர்கள்.
சமுதாயத்தில் நல்லவர்கள் யாரும் காவல் துறை ஒழிக என சொல்ல மாட்டார்கள். கெட்டவர்கள்தான் சொல்லுவார்கள். தலைக்கவசம் போடாமல் போனால் காவலர்கள் பிடிப்பார்கள். அவர்களுக்காக அரசியல்வாதிகள் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியரசு தலைவர் வேட்பளார் யார் என்பது ஒரு மாநில முதலமைச்சராக இருந்த கருணாநிதி கோபாலாபுரத்தில் இருந்து அறிவித்தது எல்லாம் ஒரு காலம். காட்பாடியில் சிப்காட் அமைக்க அரசு நிலம் மட்டும் எடுக்கப்படும். நானே அவர்களிடம் பேசி சிப்காட் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்
அப்போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT