Published : 08 Jun 2022 06:04 AM
Last Updated : 08 Jun 2022 06:04 AM
பொள்ளாச்சி: ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, பொள்ளாச்சியில் திரளான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத்திட்டத்தின் வாயிலாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் நான்கரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த திட்டத்தில் ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிஏபி திட்ட அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியில் பிஏபி பாசன விவசாயிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மட்டுமின்றி அதிமுக, கொமதேக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், வர்த்தக அமைப்புகள், வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் செயலாளர் எம்.செந்தில் கூறும்போது, ‘‘ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம், பிஏபி பாசன விவசாயிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்.
பிஏபி விவசாயிகளின் நலனுக்காக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான முயற்சிகளை அரசு எடுக்காமல், ஆழியாறு அணையில் இருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் திட்டத்தில் அரசு முனைப்பு காட்டுவது தேவையற்றது.
ஒட்டன்சத்திரம் பகுதிக்கு ஏற்கெனவே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, திண்டுக்கல் மாவட்டத்தில் வரதமாநதி, பொருந்தலாறு, பரப்பலாறு போன்ற நீர்த்தேக்கங்களும் உள்ளன. அதிலிருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கலாம். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காவிரி குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT