Published : 24 May 2022 06:07 AM
Last Updated : 24 May 2022 06:07 AM

சென்னையில் ஹெல்மெட் அணியாத 3,926 பேர் மீது வழக்கு பதிவு: பின்னால் அமர்ந்து பயணித்தவர்களுக்கும் ரூ.100 அபராதம் விதித்த போலீஸார்

சென்னை அண்ணா சாலையில் நேற்று ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஒட்டியவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்களிடம் அபராதம் வசூலித்த போலீஸார். படம்: பு.க.பிரவீன்

சென்னை: சென்னையில் நேற்று 312 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாத 3,926 பேருக்கு அபராதம் விதித்தனர்

சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை நேரிட்ட இருசக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்தனர். மேலும், 841 பேர் காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் ஓட்டுநரின் பின்னால் அமர்ந்து வந்தவர்களும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தலின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் வழிகாட்டுதல்படி, போக்குவரத்து போலீஸார் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கூடுதல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்த விதிமுறை சென்னையில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, 312 இடங்களில் போக்குவரத்து போலீஸார் நேற்று சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள், பின்னால் அமர்ந்து வந்தவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

வேப்பேரியில் ஆய்வு மேற்கொண்ட கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், பின்னால் இருப்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும். இதற்காக ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. நேற்று ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 1,903 பேர், பின்னால் அமர்ந்து பயணித்த 2,023 பேர் என மொத்தம் 3,926 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்பது காவல் துறையின் நோக்கமல்ல. மக்களின் பாதுகாப்பே முக்கியம். சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிப்பதின் மூலம் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கலாம். இனி தொடர்ந்து சிறப்பு வாகன தணிக்கை நடைபெறும். வாகன ஓட்டிகளிடம் போலீஸார் பணிவுடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து போலீஸார் பாடி-ஒன் கேமராவை உடலில் அணிந்திருப்பார்கள். இதன் மூலம் யார் தவறு செய்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். போலீஸார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யுமாறு பரிந்துரைப்போம். ஹெல்மெட் விதி போலீஸாருக்கும் பொருந்தும். இதை மீறும் போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x