Published : 12 Mar 2025 03:17 PM
Last Updated : 12 Mar 2025 03:17 PM

வத்தலகுண்டு அருகே புதிதாக திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர் | படங்கள்: நா.தங்கரத்தினம்

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே புதிதாக இன்று (மார்ச் 12) காலை திறக்கப்பட்ட சுங்கச்சாவடியை அப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் கட்டணம் வசூலிக்க இருந்த பணியாளர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து தேனி செல்லும் வழியில் செம்பட்டி- வத்தலகுண்டு இடையே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்றாலும், திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச் சாலையாகத்தான் உள்ளது. இந்த சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மக்கள் எதிர்ப்பு காரணமாக பயன்பாட்டுக்கு வராமலேயே இருந்தது.நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. மார்ச் 12 முதல் சுங்கச்சாவடி செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

காலை 8 மணிக்கு சுங்கச்சாவடி செயல்படத் தொடங்கியது. வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே அங்கு திரண்டு கிராம மக்கள் சுங்கச்சாவடியின் கண்ணாடிகள், கம்ப்யூட்டர், பில்லிங் இயந்திரம் ஆகியவற்றை அடித்து நொறுக்கத் தொடங்கினர். இதைக் கண்டு கட்டண வசூலில் ஈடுபட்டிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.

சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பெண்கள் என பொதுமக்கள் ஏராளமனோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தகவலறிந்து வந்த பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், நிலக்கோட்டை வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் பொதுமக்களிடம் அமைதிகாக்க கோரினர். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். வத்தலகுண்டு அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திண்டுக்கல்- தேனி சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x