Published : 11 Mar 2025 05:18 AM
Last Updated : 11 Mar 2025 05:18 AM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டம் குல்தாபாத்தில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதி உள்ளது. 1707 மார்ச் 3-ம் தேதி அவுரங்கசீப் இறந்தபின் அவரது விருப்பத்தின் பெயரில் இங்கு உடல் புதைக்கப்பட்டது. அந்த கல்லறையை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட வரலாற்று சின்னமாக இந்த கல்லறை உள்ளது.
இந்நிலையில், கொடுங்கோல் மன்னன் என்று அவுரங்கசீப் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். குறிப்பாக பாஜக ஆட்சியில் பல முறை அவுரங்கசீப்புக்கு எதிராக குரல்கள் எழுகின்றன. இதன் காரணமாக டெல்லியில் அவுரங்கசீப் சாலையின் பெயர் மாற்றப்பட்டது. மகாராஷ்டிராவின் அவுரங்கபாத் மாவட்டத்தின் பெயரும் சத்ரபதி சம்பாஜி நகர் என மாறியது.
இப்போது, அவுரங்கசீப் கல்லறையையும் இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. உதயன் ராஜே போஸ்லே உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் நேற்று ஆதரவு குரல் கொடுத்ததால், சமாதிக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. சீக்கியர்களின் 9-வது குரு தேஜ் பகதூரின் விழாவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று பேசும்போது, “அவுரங்கசீப் சமாதி அகற்றப்பட வேண்டும். அதற்கு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட சின்னம் அந்தஸ்து அளிக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த சட்டத்துக்கு ஏற்ற வகையில் விதிகளை மீறாமல் பிரச்சினையின்றி கல்லறையை அகற்றுவது அவசியம்” என்றார்.
பாலிவுட் வரலாற்று திரைப்படம் ‘சாவா’தான் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பதற்கு காரணமானது. சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகராஜின் கதையான இந்த திரைப்படம் குறித்து மகாராஷ்டிராவின் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதம் எழுந்தது. அப்போது சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி பேசும்போது, “பலரும் நினைப்பது போல் அவுரங்கசீப்பை நான் கொடுங்கோலர் எனக் கருத மாட்டேன். சமீபத்திய ஆட்சியாளர்களாலும், திரைப்படங்களாலும் அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுகிறது” என்று கூறினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அபு ஹாஸ்மி மார்ச் 26 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT