Published : 02 May 2022 06:02 AM
Last Updated : 02 May 2022 06:02 AM

கோவை | விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.69.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை: விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.69.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வாகனத்தின் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனத்துக்கு கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள வலியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா (38). இவர் கோவை பாரதியார் சாலையில் இருசக்கர வாகனத்தில் கடந்த 2015 ஜூன் 24-ம் தேதி சென்றார். அப்போது மேட்டுப்பாளையம் இரும்பரையைச் சேர்ந்த மாணிக்கம் ஓட்டி வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், ராஜாவின் வலது கால் முட்டிக்கு மேல்பகுதியில் இருந்து கால் துண்டித்து எடுக்கப்பட்டது. வலது கை, தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிபட்டது.

விபத்து ஏற்பட்டபோது எலக்ட்ரீசியனாக பணியாற்றி அதன்மூலம், ராஜா மாதம் ரூ.20 ஆயிரம் வருவாய் ஈட்டி வந்துள்ளார். விபத்து காரணமாக அன்றாட பணிகளை செய்ய இயலாமலும், எந்த வருமானமும் இல்லாமலும் இருப்பதால், தனக்கு இழப்பீடாக ரூ.60 லட்சம் வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் ராஜா மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா பிறப்பித்த உத்தரவு: மாணிக்கத்தின் அஜாக்கிரதை, கவனக்குறைவு, அதிவேகத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவருடையது. அந்த வாகனத்துக்கு 3-வது நபருக்கான காப்பீடு நடைமுறையில் இருந்துள்ளது.

ராஜாவுக்கு ஏற்பட்ட உடல் ஊனத்தின் அளவு 80 சதவீதம் என மருத்துவ சான்று அளிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் ஒரு கால் இன்றி அவருடைய செயல்பாடுகள் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருடைய திருமண எதிர்பார்ப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.69.20 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் வாகனத்தின் உரிமையாளர், காப்பீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x