Published : 18 Apr 2022 06:48 AM
Last Updated : 18 Apr 2022 06:48 AM

தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பங்கேற்க எதிர்ப்பு: மனு அளித்த கட்சி, அமைப்புகளுக்கு பாஜக கண்டனம்

மயிலாடுதுறை: தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நாளை(ஏப்.19) ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும், இந்த கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் ஆதீன மடத்துக்கு நேற்று சென்று, “தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு, 7 தமிழர்கள் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்கள், தீர்மானங்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தர மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். எனவே, ஞானரத யாத்திரையை தமிழக ஆளுநரை வைத்து தொடங்கக் கூடாது” என கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை ஆதீன நிர்வாகத்தில் உள்ள மேலாளர் பெற மறுத்ததால், அவரது மேஜையில் வைத்துவிட்டு வந்துவிட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு எம்.முருகானந்தம் கூறியது:

இந்து மதக் கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் திமுக, காங்கிரஸ் கட்சிகளின் தூண்டுதலின்பேரில், தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. தருமபுரம் ஆதீனத்துக்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்துக்கு எதிரான போராட்டமாகவே கருதுகிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து, ஆளுநரை வரவேற்போம் என தெரிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று இரவு சந்தித்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆளுநர் வருகை குறித்தும், அதற்கான எதிர்ப்பு குறித்தும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x