Published : 15 Apr 2022 06:05 AM
Last Updated : 15 Apr 2022 06:05 AM

புதுச்சேரி கடற்கரை திருவிழாவில் பட்டம் விட்டு கொண்டாட்டம்

புதுச்சேரி கடற்கரை திருவிழாவின் ஒரு பகுதியாக பாண்டி மெரீனாவில் பட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை திருவிழாவில் பட்டம் பறக்கவிடும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக சைக்கிள் மாரத்தான் போட்டியில் வென்றோருக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

புதுச்சேரி அரசின் சுற்று லாத்துறை சார்பில் கடற்கரை சாலை, பாரடைஸ் கடற்கரை, பாண்டி மெரீனா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை ஆகிய இடங்களில் கடற்கரை திருவிழா 4 நாட்கள் நடக்கிறது. கடற்கரை திருவிழாவை ஆளுநர் தமிழிசை நேற்று முன்தினம் மாலை தொடங்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவையொட்டி 4 நாட்கள் கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நேற்று பாரடைஸ் பீச்சில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை மணல் சிற்பம் உருவாக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மணல் சிற்பங்களை உருவாக்கினர். முன்னதாக காலையில் நடந்த சைக்கிள் போட்டியில் வென்று முதல் 3 இடங்களை பிடித்தோருக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் பரிசுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.20 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.

பாண்டி மெரீனாவில் காலை 10 மணி முதல் பட்டம் பறக்க விடுதலும், சுண்ணாம்பாற்றில் நீர் விளையாட்டும் நடந்தது. கடற்கரை சாலை கைவினை பொருள் அங்காடியில் கடல் உணவு திருவிழாவும் தொடங்கியது. நேற்று மாலை பாண்டி மெரீனாவில் கைப்பந்து போட்டியும், பாரடைஸ் கடற்கரையில் ஆடல், இசை நிகழ்ச்சியும், கைவினை பொருள் அங்காடியில் கடல் சிற்பி ஆபரண கண்காட்சியும் நடந்தது. லேகபேவில் ஆடை, அலங்கார அணிவகுப்பும், பாண்டி மெரீனாவில் திரை இசைக்குழு இன்னிசை நிகழ்ச்சியும் அனைவரையும் கவர்ந்தது.

இன்று (ஏப். 15) பாண்டி மெரீனாவில் பட்டம் பறக்க விடுதல், பொம்மலாட்டம் நிகழ்ச்சியும், புதுக்குப்பம் கடற்கரையில் மலிவு விலை பொருட்கள் அங்காடி, உறியடி நிகழ்ச்சியும், பாண்டி மெரீனாவில் வாலிபால் போட்டிகள், வயலின் இசை நிகழ்ச்சி, ஜிம்னாஸ்டிக், லேகபேவில் இசை, நடன நிகழ்ச்சி, சீகல்ஸில் பேஷன் ஷோ நடக்கிறது. 16-ம் தேதி காந்தி திடலில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு சூரிய உதய மீன் சுற்றுலா நிகழ்ச்சியும், லேகபேவில் மாலை 5.30 முதல் 9 மணி வரை இந்தோ ஆப்ரிக்கன் இசை நிகழ்ச்சியும், பாண்டி மெரீனாவில் ஜூகல்பந்தி, துடுப்பாட்டம், மால்கம்பம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x