Published : 11 Apr 2022 11:24 AM
Last Updated : 11 Apr 2022 11:24 AM

”ஆதி இசை என்பது தமிழ் இசையாகத்தான் இருந்திட வேண்டும்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ”ஆதி இசை என்பது தமிழ் இசையாகத்தான் இருந்திட வேண்டும். இந்த அரசு தமிழ் இசைக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நகராட்சி பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பொன்முடி ஆகியோர் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் புதிய இசைப்பள்ளி தொடங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். இதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "விராலிமலை என்பது இசை வளர்த்த மண். பெரும் இசைவாணர்கள் வாழந்த, வாழுகின்ற பூமி அது. குறிப்பாக பரதநாட்டியக் கலையில், 32 வகையான அடவுகளுக்கும் தனித்தனியே நாட்டிய அபிநயங்களோடு ஆடக்கூடிய மிக சிறப்பான பரதநாட்டியக் கலைஞர்கள் அங்கு வாழ்ந்தார்கள். இசை பரம்பரையினர் வாழ்ந்த பெருமைக்குரிய மண்.

குறவஞ்சி நாடகத்தை 1973-ம் ஆண்டு வரை கூட அங்கே, நடத்திய மண். அருணகிரிநாதரால் பாடபெற்ற மண். அந்த மண்ணிற்கென்று ஒரு தனியான இசை பாரம்பரியம் இருப்பதை சட்டப்பேரவை உறுப்பினர் சுட்டிக்காட்டியதை நான் வரவேற்கிறேன். ஆனாலும் கூட அங்கிருந்து 28 கி.மீ தொலைவில் திருச்சி இருக்கிறது. 40 கி.மீ தொலைவிலே புதுக்கோட்டையில் இசைப்பள்ளிகள் இருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு இசை மரபினை போற்றி வளர்க்கக்கூடிய ஒரு சாதகமான சூழ்நிலை ஏற்படும்போது இந்த கோரிக்கையை அரசு நிச்சயமாக பரிசீலிக்கும்" என்று பதிலளித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "பரதம், நாட்டியம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கலை வளர்த்த தமிழகத்தில், வரும் காலத்திலே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இந்த கலைஞர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையிலே கலை பண்பாட்டுத் துறையின் மூலம் உலகளவில் நமது கலைகளை எடுத்துச் செல்லக்கூடிய புதிய திட்டங்கள் தொடர்பான கருத்துருகளை அரசு ஏற்படுத்துமா' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இயங்கக்கூடிய இந்த அரசு கலை பண்பாட்டுத்துறைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. உதாரணமாக அண்மையில் நடந்த "நம்ம ஊர் திருவிழா" இதில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு கலை வடிவங்களை, குறிப்பாக நாட்டார் கலை வடிவங்களை காட்சிப்படுத்துகின்ற மிக பெரும் நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டது.

நலிவுற்ற கலைஞர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கக்கூடிய வகையில், அவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்குவதாக இருந்தாலும், இந்த கலை வடிவங்களை உலகளவில் பரப்பக்கூடிய விசயங்களாக இருந்தாலும் முதல்வர் இதுபோன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். அவருடைய வழிகாட்டுதலில் இயங்கக்கூடிய இந்த கலை பண்பாட்டுத்துறை வரும் காலங்களிலும் தமிழ் மண்ணுக்கென்று சொந்தமாக இருக்கக்கூடிய இத்தகைய கலை வடிவங்களை, நுண் கலைகளை , செவ்வியல் இசை கலை வடிவங்களை உலகளவில் எடுத்துச்செல்லும் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.

அப்போது பாமக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி, "மாவட்டம் தோறும் இசைப்பள்ளிகள் தொடங்க அரசு முன்வருமா, தமிழ் இசை காக்கப்படுமா" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் தற்போது 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் உள்ளன. 4 இடங்களில் இசைக் கல்லூரிகள் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஒரு இசைப் பல்கலைக்கழகம் உள்ளது. கலைக்காவிரி போன்ற அரசு உதவி பெறக்கூடிய நுண்கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எனவே தற்போதுள்ள நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தேவையை பொருத்து செயல்பட்டு வருகிறது.

இந்துசமய அறநிலையத்துறை சார்பிலும் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையைப் பொருத்து எதிர்காலத்தில் இசைப்பள்ளிகள் முதல்வருடன் கலந்தாலோசித்து தொடங்கப்படும். தமிழ் இசை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆதி இசை என்பது தமிழ் இசையாகத்தான் இருந்திட வேண்டும். தமிழ் இசைக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாம். தஞ்சை நால்வர் உள்பட இருக்கக்கூடியவர்கள், தமிழ் இசை மூவர் என்று சொல்லக்கூடியவர்கள் இவர்களெல்லாம் பாரம்பரியமான தமிழ் இசைக்கு உரமூட்டியவர்கள். எனவே அந்த வழியில் நடக்கும் இந்த அரசு தமிழ் இசைக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கும்." என்றார்.

அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், "தஞ்சையில் பரதநாட்டியப் பள்ளி, இசைப் பள்ளியை கொண்டு வருமா" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "தஞ்சையே கலைகளுக்கான மிக முக்கியத்துவமான இடம் என்பதிலே மாற்றுகருத்துக்கு இடமில்லை. கலைகளை வளர்த்த தஞ்சை மாநகரில், தொடர்ந்து அந்த கலைகளை ஊக்குவிக்கும் வகையில், நிச்சயமாக வரக்கூடி காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கும்" என்று கூறினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x